Tuesday, December 3, 2013

கண்துடைக்கும் இந்தியா

பூமுகன்

ஈழத்தமிழர் விடயத்தில் அயல்நாடு என்றவகையில் இந்தியா காலத்துக்குகாலம் தவறையே செய்துவந்திருக்கிறது.அதுமட்டுமல்லாமல்
தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.

Sunday, December 1, 2013

காற்றோடு பறந்த கதைகள்



இந்த வருடத்தின் கார்த்திகை இறுதிநாள்கள் சற்று அமைதியாகவும் அற்புத மாகவும் கடந்திருக்கின்றன.வடபகுதியில் ஏதோ செய்யப்போகிறார்கள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்று  விசேடமாகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளும் வீணாகிப்போயுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சம்பவங்களைத்தவிர மேலதிக பிரச்சினைகள் எவையும் உற்பத்தியாகவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நினைவேந் தல்கள் நடந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க இம் முறை மிகவும் உணர்வுபூர்வமாகவே மக்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இராணுவக்குவிப்பு, பொலிஸ் பாதுகாப்பு என்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கையில் இராணுவக் காவலரணில்கூட  தீபம் ஒளிவிட்டுபிரகாசித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் துயிலு மில்லங்களுக்கு அருகில், அழிக்கப்பட்ட கல்லறை எச்சங்களை எடுத்து சேர்த்த மக்கள் அவற்றுக்கும் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர்.

வீடுகள் தோறும் தம்பிள்ளைகளுக் காக அஞ்சலிக்காத எவரும் இருந்தி ருக்க வாய்ப்பில்லை. வலைத்தளங் கள் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளைத் தாங்கி மலர்ந்திருந்தன.பேஸ்புக்கில் தீபங்கள் இப்போதும் ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடக்குதல் சாத்தியமற்றது
அராஜகரீதியிலான அடக்குதல் சாத்தி யமற்றது என்பதை அரசு புரிந்து கொள்ளத் தயாரில்லை.புலிகள் - பயங்கரவாதம் என்ற சொற்களை மறந்து விட்டு பீதியற்ற இலங்கை குறித்து சிந்திக்க அரசு இன்னமும் துணியவில்லை. புலிகள் குறித்தும் அவர்களது தாக்குதல் உத்திகள் குறித்தும் இன்னமும் அது கண் விழித்து கனவுகண்டபடியே இருக்கிறது. இதன்காரணமாகவே தமிழ் மக்களது பொது நிகழ்வுகளுக்கு தடை போட்டு அவர்களது பாரம்பரியங்களை தடைசெய்ய முயற்சிக்கிறது. இறந்தோர் மற்றும் நடுகல் வழிபாடுகளுக்கு கூட  அரசு தடைவிதித் துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இது பச்சைக் குழந்தையை காரணம் தெரியாமல் தாக்குவது போன்றது. அதாவது ஒரு குழந்தை ஏதும் அறியாப்பருவத்தில் ஒரு கெட்டவார்த்தையை தவறுதலாக உச்சரித்தால் அதை நிறுத்துமாறுகூறி நாம் தண்டிப்பதில் பயன் இருக்காது. அப்படி தண்டித்தால்  தான் கூறுவதில் ஏதோ விடயம் இருக்கிறது என்று அந்த குழந்தை தொடர்ந்து கூற முற்படும்.  அடக்கமுறையும் அப்படிப்பட்டதே.

அடக்குமுறை  பின்னாளில் உடைப்புகளைத் தோற்றுவிக்கவல்லது. விடுத லைப்போராட்டம் வளர்வதற்கு அடக்குமுறையே காரணமாக இருந்தது என்பதை இன்றைய ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை.

போரால்பேரழிவு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுப்பொறுப்பாளிகளும் சிங்களத் தலைவர்களே.அதே தவறு களையே மீண்டும் ஏற்படுத்த தென் னிலங்கை சக்திகள் விரும்புகின்றன.

உரிமைகளைக் கேட்பது தவறல்ல
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் தமது உரிமைகளைக் கேட்பது தவறாகாது. வாழிடம்,பண்பாடு, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்கு ஒரு இனத்துவ சமூகத்துக்கு உரிமை இருக்கிறது.இது ஜனநாயக நாடொன்றில் இருக்கும் உரிமை. அப்படியான சகல உரிமைகளையும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் கேட்பது நியாயமானதே.

இலங்கை அரசு தன்னை ஜனநாயக அரசாகக் காட்டும் வரை இத்தனை உணர்வுகளையும் மதித்தாகவேண் டும். இது சர்வதேச நியதி.ஆனால் இலங்கை நடைமுறையில் ஜனநாய கப்பண்புகளைக் கொண்டிருக் கிறதா? அது தனது நாட்டுமக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக் கிறது ?  என்ற நிலையில் இறுக்கமான-வியத்தகு விடைகள் வெளிப்படலாம்.
ஆகையால் தமிழ்மக்கள் கோரும் உரிமைகளுக்கும் பதில்கள் இன்ன மும் மர்மாமாகவே தொடர்கின்றன. 

பரப்புரை மேடைகள்
வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப் பட்ட காலத்தில்  பரப்புரைமேடைகள் போர்க் களமாகின.அரசதரப்பு கட்சிகளும் எதிர்தரப்பு கட்சிகளும் வறட்சிக்கால இடிமின்னல்களாக மின்னி  முழங்கின.

எல்லாக்கருத்துக்ககளையும் சலவை செய்து பார்த்தால் எவற்றிலும் அழுக்கில்லை.அப்படியே தூய்மையாக மறைந்துவிட்டன.கிளிநொச்சி மாவட்டத்தில் அரசதரப்பு வேட்பாளர் ஒருவர் "" நான் மாவீரர் துயிலுமில் லத்தை மீள நிறுவ அனுமதிபெறு வேன்''என்று சூளுரைத்தார்.பாவம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கமுன்வரவில்லை.ஏனோ தெரியவில்லை. (ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் சில வேளைகளில் கடந்த 27ஆம் திகதி நாம் எல்லோரும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சென்று மாவீரர் களை வணங்கியிருக்கலா மல்லவா?)

பொய்கூறி பிச்சைஎடுத்தல்
பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களின் வாக்குக்களை பிச்சைஎடுப்பது தவறானது என்பதை அரசியலுக்கு வரவிரும்புபவர்களும் வந்து வாலறுந்து நிற்பவர்களும் புரிந்தாக வேண்டும். அதுபோக நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து மக்களை ஏமாற்றுவது மிகமோசமானது.

வடமாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட அனைவரும் பரப்புரை மேடைகளில் முழங்கியதற்கு மாறுபாடாகவே செயற்பட்டுவருக்கின்றனர். அதற்கான காரணங்கள் மாகாண சபைக்குள்ள அதிகாரங்களை விளங்கிக்கொள்பவர்களுக்கு புரியும். வெளியில் கூட்டமைப்பு குறித்த விமர்சனங்கள் பலவாறாக இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை வேறுபாடே இதற்கு காரணமாக உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இன்றைய தேவை கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென்றே   தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு முடிவை எடுத்து அறிவிப்பதற்கிடையில் வரும் மறுதலைக் கருத்துக்கள் அந்த முடிவையே கேள்விக் குறியாக்கிவிடுகின்றன. இதுதான் கூட்டமைப்புக்கு சாபக்கேடாக இருக்கிறது. நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் உரை நிகழ்த்த அதை இன்னொருவர் கொச்சைப்படுத்து வது அநாகரிகமானதே.

மக்கள் கொண்டாடுவர்
எந்த எதிர்ப்பையும் சந்தித்து தமது உரிமைக்காகப் போராடவும்,தமது விழுமியங்களைக் கொண்டாடவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவவேண்டியது தமிழ் தலைவர்களது பொறுப்பாகும்.

தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்டங்களில் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆர்வத்தடன் கலந்துகொள்கின் றனர்.ஆனால் ஓரிரு அரசியல் தலைவர்களைத்தவிர பலரின் முகங்களை இதன்போது காணவே முடிவதில்லை. இந்த நிலைமையும் மாற்றப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மாளிகைச் சந்திப்புக்களை மட்டும் நடத்தாது மக்களோடு சேர்ந்து களத்திலும் குரல் கொடுக்கவேண்டும்.

இனிவரும் நாள்களும் போராட்ட நாள்களே.வடக்கு  மாகாண சபை இன்னமும் மக்கள் மயப்பட வில்லை. அது அரசியல் மேலாதிக்கத்துடனேயே தொழிற்படுகிறது. சபை உறுப்பினர்களுக்காக அதிகாரங்கள் எவை என்றே தெரியவில்லையாம். விரைந்து பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இதன் மூலமே மக்கள்மயப்பட்ட நிர்வாகத்தை இயக்கமுடியும். அதை விட இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நியாயமான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.

''விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு மாவீரன். இதில் எந்த ஐயப்படுகளும் இல்லை''  என்றால் அந்த விடுதலை வீரனின் படத்தை வடமாகாண சபையில் தொங்கவிடுங்கள்.அப்போதாவது அங்கு வீரம் பிறக்கட்டும்.

நன்றி சூரியகாந்தி 01.12.2013

Wednesday, November 27, 2013

கனவு மெய்ப்பட

விழிநீர் சொரிந்து
வளி(ழி) நெடுக்கும்
விளக்கேற்றினோம்

சப்பாத்துகால்களால்
ஏறிமிதித்தனர்
கடந்துபோனவருடத்தில்


ஓயோம் உணர்வு
விட்டகலோம்
சாயோம் ஒளிபடு
பொழுதில் விளக்கேற்றாமல்-என்று
அப்பொழுதில் உறுதியெடுத்தோம்
அடுத்தவருடத்துக்காய்

வருடம் பிறந்து
கார்த்திகை உருண்டது
நஞ்சுக்கிழங்கு
மண்பிளந்தது

கருமேகம் கூடிவரும்
காவலர்கள் நாளதனில்
இருநிறத்தாள் இதழ் எடுத்து
சாத்திஒரு சத்தியம் செய்தோம்

விலங்கொடிய எம்
இனம்வாழவளிதந்த
வேங்கைகளே நாம் மறவோம்

வீரவரலாறுகொண்டு
வெல்வோம் விதைத்தவர்கனவு
மெய்ப்பட ஈழமதில்வாழ்வோம்!

Sunday, November 24, 2013

சுடர் ஒளிரும்


பச்சை மிருகங்களின்
ஆக்கிரமிப்புக்கள் வீதிகளில்
பயந்து முன்னேறுகின்றன
சனங்களின் வாகனங்கள்

சொச்ச இடமெலாம்
மிச்சம் இன்றி தேடும் பகை
கொச்சைப்படுத்தவென்று
கச்சை கட்டிநிற்கிறது

பல்கலை பக்கம் பயன் பொருட்டும்
செல்லமுடியாக் கொல்லைகள் -தினம்
தொல்லை தரவல்ல துரோக கும்பல்
கெல்மெட்டுடன் ஊர்சுற்றிவருகின்றன

இருபத்து ஏழில் ஒருமித்து மனங்கள்
சுடர் ஏற்றத் தயாராகி விட்டன -
இடர்வரினும் சுடர் ஒளிரும்
தடைவரினும் தாகம் தீரும்

பூமுகன் 25.11.2013

Monday, November 18, 2013

படுவீர் துயரம்


நாங்கள் வளர்த்த கிளிப்பிள்ளை -அவள்
பெண்புலிப் பிள்ளைதான்
சுடு கலன் ஏந்தா  போராளி!

பேனா முனை எடுத்து -அவள்
ஆனான பிரச்சினைகள்
அத்தனையும் பேசியவள்

குறும்படம் எடுத்து - அவள்
நெடும்வழி சென்று
அறவழிப் போராடினாள்

துயிலறைக் காவியங்களை - அவள்
துலக்கமாய்  படைத்து
மாவீரர் புகழ்பாடினாள்

தொலைக்காட்சி முன்தோன்றி - அவள்
தொகுப்பளினியுமாகி
தொடர்ந்தாள், சேதி சொன்னாள்

குணக் குன்று - அவள்
குடும்பியில் பிடித்தனர் கோழைகள்
குருதியில் கிடந்தாள்

குருதியில் கிடந்த - அவள்
குவலயம்  பார்த்தது
குட்டு வெளிப்பட்டது படுவீர் துயரம்

பூமுகன்(19.11.2013 am 2.51)

காந்தள் பூ



கார்திகை உருண்டு மறைகையில்
எங்சியிருக்கும் இறுதி நாட்கள்
எங்கள் மறவர்களுக்கானவை!

இடித்தழிக்கப்பட்ட கல்லறை -
பயிர்கள் மெல்ல முளையூன்றி
சிவப்பு மஞ்சளாய் ஒளிர்விடும்!

சிறு பனிமழைதூவி அவை
முளைத்து வெளிவர வழி -
தேடி கருமுகில் ஒன்றுகூடும்!

தனிமையில் இருந்து தாய் -
அழுகையில் ஒருமலர்
நிறவண்ணமாய் சாந்திகூறும்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
என் நிறமெடுத்து சாத்து
உன்விழிநீர் விலக்கி விளக்கேற்று!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

பூமுகன் (19.11.2013 am 1.00)

Sunday, November 17, 2013

உள்ளே போர் வெளியே படம்


வட மாகாண சபை  மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.  தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம்,  என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது. 
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில்  தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன்  கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.

ஆனாலும்  தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக  கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால்  அவர்கள்  உணர்ச்சி அரசியலுக்கு அப் பால்  தமது   நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர். 

அதில் முதலாவது மஹிந்த அரசின் மீது அதிருப்தி  அடுத்தது சர்வதேசத்துக்கு தமது பிரச்சினை எடுத்தி இயம்பப்பட வேண்டும் என்ற விருப்பு.  
இதற்கான தனித்தெரிவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது. ஆனாலும் "தமக்குள்ளே  அடிபடுபவர்களை'' தலைவர்களாக்கி நெடுநாள் பிரச்சிணைக்கு தீர்வு கண்டுவிட முடியும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. 
இன்னும் மஹிந்த அரசின் மீதான கோபம் தமிழ் மக்களுக்கு கூடிக் கொண்டே செல்கிறது. ஆகையால் அந்த கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர். 
இவை ஒருபுறமிருக்க தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக் குறியாகிக் கொண்டு செல்வதை தமிழ் மக்களே உணருகின்றனர். 

இதற்காக தமது இருப்பு குறித்து குரல்கொடுக்கக்கூடிய  சக்தியொன்றை உருவாக்க அல்லது தேடிக்கொள்ள தமிழ் மக்கள் தலைப்படுகின்றனர். ஆனாலும்  அதில் அவர்களுக்கு திருப்தியில்லை. எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தமிழ் மக்களுக்கு மாற்றுத் தெரிவு இப்போதைக்கு இல்லை என்ற அடிப்படையில் வட மாகாண சபைக்கு அவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்தனர்.  இதற்காக அவர்கள்   தமது வாக்குகளை பயன்படுத்தி கூட்டமைப்பை மாகாண சபைக்கு அனுப்பி வைத்தனர். 

பதவிச் சண்டை
மாகாண சபை தெரிவு செய்யப்பட் டதும் பதவிக்காக பலர் படாதபாடுபட்டனர். பதவியேற்பதற்கு பாசாங்கு செய்தனர்  ஒற்றுமையைக் குலைத்து ஒவ்வொரு மூலையில் நின்று கொண்டு தமிழ் அரசை இயக்கு வது எப்படி என்ற கேள்விக்குறியை ஆரம்பத்திலே இட்டுவைத்தனர். இன்றுவரை  எதோ ஒரு வகையில்  உள் வீட்டுச் சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

கன்னியமர்வு கழிந்தது
ஒருவாறாக சண்டை சச்சரவுகள்ஓய  தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண சபையில் கன்னியமர்வு நடை பெற்று முடிந்தது. அமைச்சுகள்  அமைச்சுப் பொறுப்புகள்  பகிர்ந்தளிக்கப்பட  ஓரள வுக்கு  நிம்மதி எற்பட்டது.  வட மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் தேர் தல் பரப்புரை மேடைகளில் முழுங்கிய தைப் போல் அல்லாமல் அதிலி ருந்து முற்றாக மாறுபட்டு இருக் கிறது என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர். ஆனாலும் இருக்கக் கூடிய அதிகாரங்களைக் கூட தெரிந்துகொண்டு பயன் படுத்த மாகாண சபை அங்கத்தவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தீரவில்லை பிரச்சினை
தமக்கு வாகனங்கள் ஒதுக் கப்படவில்லை, தமக் கான பணிகள் வரையறுக்கப் படவில்லை. என்று சபை அமர்வுகளில் சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பதையும் உறுப்பினர் கள் நிறுத்தவில்லை. சொல்லப்போனால் இவர் கள் அனைவரும் தாங்கள் அரச உத்தியோகத்தில் அமர்த்தப்பட்டி ருப்பது போல எண்ணிக் கொள் கின்றனர் என வரையறுக் கலாம். காரணம்  மக்கள் பணி இவற்றில் இருந்து வேறுபட்டது என்பதே. 

ஆளுநர் வேண்டாம் 
வடக்கில் வட மாகாண சபை தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் கைகளில் வந் ததும் ஏற்கனவே இயங் கிக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியான  ஆளுநரை வீட் டுக்கு அனுப்ப வேண்டும்  என பறை சாற்றப்பட்டது. இதற்கு தென்பகுதி யில் இருந்து ஆதரவு‡ எதிர்க்கருத் துகள் கிளம்பின. 

உள்ளே எதிர்ப்பு வெளியே படம் 
சபையின் முதலாவது  உத்தியோ கபூர்வ அமர்வு கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் இராணுவ ஆளுநரை மாற்ற வேண்டும் என்று  தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  ஆனாலும்  அதற்கு முன்னரே  ஆளுநரின் அடாவடி விடைபெறுவது உறுதி யாகிவிட்டது.         அமர்வுக்கு  ஆளுநர் வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. 
பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மாகாண அதிகாரம் பரவ லாக் கப்பட்டதை அறிவிப்பதாய் இருந் தது. ஆனால் அதில் ஒன்றுமில்லை என்பது தெரிந்ததே. 
உள்ளே  ஆளுநருக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தோட ஆளுநரின் உரையை சிலர் புறக்கணித்திருந்தனர். 
ஆனால் ஆளுநர் விடைபெறுகிறார் என்ற கவலை, அவருக்கு  மரியாதை வழங்கி வழியனுப்பும் விருந்தோம்பல். விருந்து வெளியே வைக்கப்பட்டது. வெளியில் சபை உறுப்பினர்கள் ஒரு சிலர் தவிர  மீதிப்பேர் ஆளுநரை இருத்தி வைத்து ஞாபகத்திற்கு குழுப் படமும் எடுத்துக் கொண்டனர்.

கன்னிகளின் தடுமாற்றம்
கடந்த கன்னியமர்வில் உரை யாற்ற சந்தர்ப்பம் கிடைக்காத நபர்களுக்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் கிடைத்தது. தட்டுத் தடுமாறி  தமிழ் பேசினர் அவர்கள்.பயம் வெட்கம், என்று எதோ  இவர்களை பீடித்திருக்க வேண்டும். அதனால் தான்  அவர்களுக்கு  அந்த  நடுக் கம் ஏற்பட்டு இருக்கிறது.

சிரிக்க வைத்த எதிரணி
வவுனியா மாவட்டத்தில் வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப் பட்ட எதிரணி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற  ஆரம்பித்தார்.  சிங்கள  இனத்தவராகினும் அவர்  நல்ல தமிழில்  உரையாற்றினார். ஆனால்  அவரது உரை  தமிழ் மக்களை எள்ளிநகையாடுவதாக இருந்தது. அதை ஆளும்தரப்பு உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர். 
"வட மாகாண சபை உறுப்பினர்  தனக்கு உதவுவார் என  நம்பி வந்த  ஏழ்மைப் பெண்ணை நகைச் சுவையாகப் பேசி  நான் அனுப்பினேன்'' என்பது  அவரது உரை.
"ஐயா வீடு ஒழுகிறது. உறங்குவதற்கு இடமில்லை. ஏதாவது உதவி செய்யுங்கள்''  இதுதான் அந்தப் பெண்ணின் வேண்டு கோள். அதற்கு இவர் கூறியிருகிறார். 
"ஒழுக்குக்கு சட்டி வையுங்கோ.  மழை நீரையும் சேமிக்கலாம் பாத் திரங்களும் கழுவப்படும்.'' என்று 
உண்மையில்  மழைகாலத்தில்  எத்த னையோ குடும்பங்களின் வாழ்வு இப்படித் தான்  கழிந்து கொண்டு தான்இருக்கிறது.  வீடு என்ற அடிப்படை வசதியின்றி ஒழுக்குக்கு பாத்திரம் வைத்து விட்டு நடு ராத்திரியில் கண் மூடாது விழித்திருக்கும் மக்களுக்கு பொறுப்புள்ள அதிகாரிகள் சொல்லியனுப்பும் பதிலா இது.  குறித்த உறுப்பினர் உண்மையில் நகைச் சுவையா பேசியிருந்தாலும்கூட இப்படித்தான் நிலைமை இருக்கிறது; இருக்கும் என்பது  வேதனையளிக்கிறது. 

பேச மறந்த விடயங்கள் 
வடக்கு மாகாண சபை  தமிழ் மக்களது  வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி  ஏற்பட்டுள்ள, ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்கும் என்ற எதிர்பார்ப்பு தவிர்க்க முடியாதது. காரணம் கடந்த முப்பது வருட போராட்டம் தமிழ் மக்களுக்கு மீதியாய் விட்டு சென்றவை அழிவுகளும்  ஆபத் துக்களையுமே. இந்த  நெருக் கடியான  நிலையில் இருந்து  வெளிவருவதற்கு உரிமை சாரா தேவைகளின் ஒன்றாக  அபிவி ருத்தி  முக்கியமாகிறது.  எனவே மக்கள் தேவைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண் டியது மாகாண சபையின்  கடமையாகிறது.  குறிப் பாக  இழந்த நிலத்தையும் உரி மைகளையும் சிங்கள தேசத்தி டமிருந்து மீளப்பெறுவதற்கு முன்னர் இருக்கும் இடத்தில் தமிழன்  ஒருநிலைப்பட்டாக வேண்டியிருக்கிறது. வாழ்வியலை மேம் படுத்த வேண்டியிருக்கிறது. 
தற்போது தமிழனுக்கு இருக்கும் நிலமும் பறிபோகும் அபாயமே ஏற்பட்டு இருக்கிறது. இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை விழுங்க  ஆரம்பித்து இருக்கிறது. 

எனவே  இந்த ஆபத்தில் இருந்து  தமிழ் மக்களைக்காக்க வேண்டிய பொறுப்பும் வட மாகாண சபைக்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கடந்த கூட்டத்திலும்  தமிழ் மக்களின் அநேகமான பிரச்சினைகள்  பேசப்பட வேயில்லை. இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கிறது.  

ஆளுநருக்கு வக்காலத்து   
அன்றைய கூட்டத்தில்  ஆளுநர் வடக்கில் மீள் குடியேற்றம் முற்றுப் பெற்று விட்டது என்று கருத்து தெரிவித்திருந்தார். 
அகதி முகாம்கள் இயங்குகின்றன. வாடகை வீடுகளில் இன்னமும் இடம் பெயர்ந்தோர் வாழ்கின்றனர்.  பல கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயங் களாக படையினர் வசம் உள்ளன.  தம்மை மீள்குடியேற்றுமாறு மக்கள்  வீதிகளில் இறங்கி தினமும் போராடுகின் றனர்.  தமது காணிகளை மீட்டுத்  தருமாறு நீதி மன்றங்களில்  நீதி கேட்கின்றனர்.

இவையயல்லாம்  நடந்து கொண்டிருக் கையில்  மீள் குடியேற்றம் முற்றுப் பெற்றது என  ஆளுநர் அறிக்கையிட என்ன அருகதை யிருக்கிறது. போதாக் குறைக்கு  ஆளுநர் சொன்ன கதை அனைத் தும் உண்மை என்று  வாக்காலத்து அறிக்கை விடு கின்றனர் அவர்சார்பு  அரசியல்வாதிகள். 

பொறுமைதான்  பொருத்தமோ?
மாகாண சபையில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை பேசப்படவில்லை என எழுந்து இருக்கும் குற்றச்சாட்டுக்கு சபையைச் சார்ந்தவர்கள்  அவசரம் ஆபத்தானது என  கருத்து தெரிவிக் கக்கூடும்.  ஆற அமர யோசித்து  பொறுமையுடன்  செயலாற் றினால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என இருப்பது தற் காலத்துக்கு  பொருத்தமானதாகாது.
மேடைகளில் முழங்கிய வேகம் தணிந்துவிட்டது. பேசிய பேச்செல்லாம் மறந்தாயிற்று. இப்படி இருக்கையில்  ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவு எப்படி இருக்குமோ என்பது  கேள்விக் குறியே.  இதுவே மக்கள் ஐயத்துக்கு காரணமாகவும் இருக்கிறது.  

ஒரு நிலைப்படுதல்
மாகாண சபையில் அங்கம் வகிக்கும்  ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் எதி ரணி உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.  அரசியல் எதிர்காலத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி  குழப்பி தமிழ் மக்களது  ஏகோபித்த ஆதரவை கேள்விக்குறியாக்க முயலக்கூடாது. 
மக்கள் ஒற்றுமையுடன் வாக்களித்தனர்  கூட்டமைப்புத்  தேர்தல்  பரப்புரைக்கு போகாத இடங்களில் கூட  கூட்டமைப் பினருக்கே  வாக்களிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே  அந்த ஒற் றுமையையும் உணர்வையும் மதித்து  மாகாண உறுப்பினர் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். 
குற்றச்சாட்டுக்கள்  குறை  நிறைகள்  எந்தக் காரியத்திற்கும் பொதுவா னவை அதற்காக  ""இவர்கள் எப்பவுமே இப்படித்தான் '' என்று குறை நிறைகளை அலட்சியம் செய்யக் கூடாது. அவை  ஆராயப்பட வேண்டும். கருத்தில் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலமே சிறந்த மக்கள் சேவையை மாகாண சபை நிர்வாகத்தின் ஊடாக வழங்க முடியும்.  

வீகேஎம் ( நன்றி- சூரியகாந்தி 17.11.2013 )

Saturday, November 16, 2013

தடுப்பு மிருகங்கள்



அவன் அழுகிறான்
எங்கள் கால்கள் நனைந்தன
அயலில் சிரித்துக்கொண்டு - சிலர்
அழுதனர் தமது அநியாயத்தை எண்ணி


யோன் சோவ் மீட்பரானார்
எல்லோரும் ஜெபிக்கின்றனர்
தங்களுக்காக அல்ல
தவறிப்போன குழந்தைகளுக்காக

தடுப்பு மிருகங்களையும் தாண்டி
உணர்வுகள் ஆர்ப்பரிக்கின்றன
எமக்கிங்கு நீதி - இல்லை
மீட்பர்களே மீட்டுத்தாருங்கள் என்று

மாலைப்பொழுது கரைகிறது
கண்ணீரின் வெள்ளத்தில்
அத்தனை மனங்களும்
எண்ணின பொழுது விடிந்துவிட்டதாய்!

தடுப்பு மிருகங்கள் தவறாது
கடமை காக்க - பிரிந்து
செல்கின்றன உணர்வுகள்
அடிமைகளாய் மீண்டும்
புறப்பட்டோம் வீடுகளுக்கு..

பூமுகன் (17.11.2013)

Wednesday, November 13, 2013

விடுதலைக்காக துயிலுரிக்கப்பட்ட இசைப்பிரியா

சுடர்ஒளி வார சஞ்சிகையில் சின்னவன் எழுதிய பதிவை அவரது அனுமதியுடன் இங்கே இடுகை செய்துள்ளேன்.

கணீர் என்ற குரல்.இப்போதும் காது களைத் துளையிட்டுச் செல்கிறது.அவளது அழகுத் தோற்றமும்,மெல்லிய உடலும், அஞ்சாத பார்வையும்,ஆளுமையும் ஈழத்துப் புதுமைப்பெண்ணாய் அவளை தோற்று வித்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிணமிப்புகள் குறித்து இப்போது விரும்பத்தகாத பரப்புரைகளே மேலோங்கி யிருக்கின்றன. விடுதைலைப் போராட்டத்துடன் ஒன்றித்து இருந்தவர்களில் பலர் இன்று அரசுப்பக்கம் தாவி தங்கள் பிழைப் புக்காக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றனர். இப்படியாகத் தமிழினத்துக்கு வந்த சாபக் கேடு, இனத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் நேரத்தில் புதிய அதிர்ச்சி இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதே.
இசைப்பிரியா சிங்கள காட்டுமிராண்டி படைகளால் உயிருடன் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படையினருக்கு இசைப்பிரியா என்ற பெண் கொல்லப்படும் வரை இசைப்பிரியா துவாரகாவாகவே தெரிந்திருக்கிறாள்."ஐயோ அது நான் இல்ல' அந்த ஓசைதான் கணீர் ஒலியின் கடைசி உச்சரிப்பு. இனி இசைக் குயில் ஓசை  எங்கள் காதுகளுக்கு எட்டாது. மனதில் ஏந்தி வைத்திருக்கும் நினைவுகளை மட்டுமே அளவிட்டுக் கொள்ளமுடியும்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஒருபக்கம் பெண்விடுதலை மறுபக்கமாக வளர்ச்சி பெற்ற காலம் அது. ஒரு போராளியாக இருந்து கொண்டு மக்களுடன் பணியாற்றி யவள் என்பதுடன் பெண்விடுதலைக்காகவும் பாடுபட்டவள் இசைப்பிரியா. ஆணாதிக்க சமூகத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்,அடக்குமுறையாளர்களது பிடியிலிருந்து பெண்கள் வெளிவரவேண்டும்.அப்படி வரவேண்டுமானால் பெண்கள் போராடவேண்டும் என்ற சிந்தனையோடு செயலாற்றியவள் இசைப்பிரியா.

எந்த நோக் கத்துக்காக இசைப்பிரியா போராடி னாளோ எவை எல்லாம் இந்த தேசத்தில் தடுக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தாளோ அந்த நோக்கமும் குரலும் அவளது குரல் வளையை நசித்து விட்டது. இந்த துன்பகரமான பொழுதில் பலர் இந்தக் கொடுமைகளை சரி என்று வாதிடுவது கேவலமானது.

தமிழினத்தின் வாழ்வுக்கும் விடியலுக்கும் குரல்கொடுத்த போராளி இசைப்பிரியா என்றென்றும் தமிழ்மக்களைவிட்டகலா மாவீரரே.

இசைப்பிரியா பற்றி எனது குறிப்பு(சின்னவன்)

நான் உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலம் அது.சும்மா இருப்பதை விட ஏதாவது வேலை செய்யவேண்டும் என்ற விருப்பம். நண்பரின் உதவியுடன் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கான பயிற்சிக் குழுவில் இணைந்து கொண்டேன். நாங்கள் இரண்டாவது பயிற்சி அணி. காலையில் இருந்து மதியம் வரை பயிற்சி. செய்தி, கமெரா, நிகழ்சிச்த் தொகுப்பு உள்ளிட்ட பயிற்சிகள். தேர்ச்சி பெற்றவர்களால் வழங்கப்பட்டன.

மூன்று மாத பயிற்சியின் முடிவுக்கட்டம் அது. இசைப்பிரியா அக்கா என ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும் அவரது திறமைகள்பற்றி ரீவியில் மட்டுமே அவதானித்திருந்தோம்.ஆனால் முதற்தடவையாக அவர் எங்களுக்கு செய்தி வாசிப்புத் தொடர்பாக பயிற்சிதர வந்திருக்கிறார். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அவள் முகம் எப்போதும் சிரித்தபடி இருக்கும்.ஆனாலும் கண்டிப்பு. பெண்போராளிகள் அவர்மீது வைத்திருக்கும் மரியாதை, பயம் எல்லாம் அவரது செயற்பாடுகளுக்கான பக்கபலமாகத்தான் இருக்கவேண்டும்.

தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவின் நிதர்சனம் மகளிர் பிரிவில் இருந்து அவர் குறுத்திரைப்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள் வாயிலாக தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளை வெளிக் கொணர்ந்தவர். மக்களோடு பணியாற்றியதால் அவளை தமிழ்ப் பாண்பாட்டு உடைகளிலேயே அவதானிக்கமுடியும். சரி பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுவார். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் இவைதான் அவரது வளர்சிப் படிகள்.
இசை அக்காவின் இத்தனை உணர்வுகளும் தான் எல்லோருக்கும் அவர்மீது விருப்பத்தை யும் நம்பிக்கையையும் வளர்த்திருந்தது.அப்படி அவரின் இரசிகர்கள் பட்டியலில் இருந்த எமக்கு அவரே பயிற்சி தரவந்திருந்தார்.

ஈழநாதம் பத்திரிகைதான் வன்னியில் செய்திபரப்பி.பாதை அடைபட்டிருந்ததால் வேறு தினப் பத்திரிகைகளை உடனே பெற்று கொள்ளமுடியாது. எங்கள் கையில் அந்தப் பத்திரிகை தரப்பட்டது. அதற்கு முன் அறி வுரைகள் கருத்துக்கள் தொடங்கிவிட்டன. வட்டமாக கதிரைகளில் அமர்ந்திருக்கிறோம் சுழற்சிமுறையில் வாசிக்கவிடுகிறார். ஒவ் வொருவரும் "தம்' கட்டி செய்தி வாசிக்கின்றனர். வேறு வேறு "ஸ்ரைல்' வந்து போகின்றன. அக்காவுக்கு திருப்தியில்லை. "தம்' கட்டாதைங்கோ. உங்கட "ஸ்ரைல்ல' வாசிங்க. யாரையும் பின்பற்றவேண்டாம். ஒவ்வொரு வரையும் திரும்பத் திரும்ப வாசிக்கவிட்டு பிழைகளைச்சுட்டிக்காட்டினார்.

ஒளிவீச்சு தொகுப்பாளராகவும் துயிலறைக் காவியம்’ ரீவி நிகழ்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் "சாலை வழியே’  வேலி'’"இராஜகுமாரியின் கனவு'’ உள்ளிட்ட குறும்படங்களின் பிரதான பாத்திரமாகவும் ஈரத்தி’ என்ற முழுநீளத் திரைப்படத்தின் நடி கையாகவும் இன்றளவும் இசைப்பிரியா எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்.
பயிற்சி முடிந்ததும் ரீவியில் செய்திப்பிரிவில் பணியாளராக இணைந்து கொண்டேன். அப்போது இடையிடையே செய்தி கலையகத்தில் இசை அக்காவை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

செய்தி வாசிப் புக்காக கலையகம் வரும் இசை அக்கா தேவையற்று எவ ரிடமும் பேசமாட்டார். தர்மேந்திரா கலையகம் மிகவும் அமைதி நிறைந்தது. அந்த அமைதிக்குள் கமராவுக்குமுன் ஒரு அமைதி.

தொலைக்காட்சியில் பெரும்பாலும் இரவு 8.30 செய்திக்காக கலையக அறிமுகத்தை இசை அக்கா வாசிப்பார். மடிக் கணினியின் திரையில் செய்தியின் கலையக அறிமுகம் "மூ' பண்ணிக்கொண்டிருக்கும். ஒரே தடவையில் அதை எந்த தடங்கலும் இன்றி வாசித்து விடுவார். விமானத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டே ஒளிபரப்பாகின.பதிவு ஓரிடம், தொகுப்பு ஓரிடம், ஒளிபரப்பு ஓரிடம் என்று பாதுகாப்புப் பலமாகவே இருந்தது.இவை எல்லாவறிலும் இசையின் பங்கு நிறைந்திருக்கும்.
இசை அக்கா வின் பணி இவை மட்டுமல்ல. எனக்கு தெரிந்த சிறு அறிமுகம் மட்டுமே இங்கு பதிவாகியிருக்கிறது.


****
இசைப்பிரியா ஒருத்தியின் துகில் மட்டும் உரிக்கப் படவில்லை. இது போன்று பல பெண்போராளிகளுக்கு இந்த அவலம் நிகழ்ந் திருக்கிறது. இறுதி நேரத்தில் பல பெண் போராளிகள் ரவுசர் சேட் அணிந்திருந்தமையால் மக்களோடு மக்களாக தஞ் சமடைய முடி யாது போனது. அந்த உடைகளுடன் மாட்டிக் கொண்ட போராளிகள் பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. பலர் சரண் அடைவதற்கு தயாராக இருந்தபோதும் உடை மாற்றியே சரணடைய வேண்டும் என்பதால் மரணித் திருக்கின்றனர்.

பல பெண் போராளிகள் இராணுவத்தினரால் உயிருடன் பிடித்து செல்லப்பட்டதை பலர் பார்த்திருக்கின்றனர். பிடித்து செல்லப்பட் டவர்களுக்கு என்ன நடந்தது? மிகச்சாதாரணமாகவே தமக்கு ஒன்றும் தெரியாது. காணொலி பொய், ஆராய வேண்டும் என்று இராணுவத்தரப்பு கூறுகிறது.

காமப்படைகளது பசிக்கு இரையாக்கப்பட்ட ஒரு ஈழப் பெண்ணின் காணத்தகாத கொடு மைக்காட்சிகள் இன்று இணையத்தளங்களில் வலம்வரு கின்றன. இசைப்பிரியாவுடன் இறந்து கிடக்கும் சடலங்களும் பெண்போராளி களினதே. அப்படியானால் அவர்களுக்கும் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. வெளிவராத கொடுமைகள் பல இன்னும் மறைந் திருக்கின்றன. காட்சிகளை ஒளிவடிவில் இராணுவத்தினரே பதிவுசெய்திருக்கின்றனர்.

விளைவுகள் என்ன ஆகும் என்று அறியாத இராணுவத்தினருக்கு அப்போது அவை ஆபாச வீடியோக்களாக தெரிந்ததால் தமது தொலைபேசிகள் வாயிலாக வேறு நபர்களுக்கு பகிர்ந்திருக்கின்றனர். அவை வெளிநாட்டு ஊடகங்களுக்கு விலைபேசி விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டுள்ள சர்வதேச ஊடகங்கள் இன்று இலங்கைக்கு ஆப்புவைததிருக்கின்றன.

வெளிநாட்டு ஊடகமான சனல் 4 ஊடகம் இலங்கையில் இனப்படுகொலை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தி இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக முன்னிலைப்படுத்தியிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை அந்த ஊடகம் வெளியிட்டிருக்கிறது, வெளியிட்டு வருகிறது.




பெண்விடுதலைக்காக போராடும் உலக அமைப்புக்கள் அனைத்தும் இதுவிடயத்தில் கருத்தில் கொண்டு இலங்கை இராணுவத்துக் குத்தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க வலியுறுத்த வேண்டும். இலங்கையில் இடம் பெற்ற மனித பேரவலம் இனி எங்கும் ஏற்படா மல் இருப் பதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


****
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இசைப்பிரியா 1981 மே மாதம் 02ஆம் திகதி பிறந்தவர். இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக  1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் தனது கல்வியை இடைநிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.

கழிப்பறையைக் கழுவும் கைகள்

இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.
அபிவிருத்தி சுட்டிகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புக்கள் உயர் நிலையில் காட்டப்பட்டாலும் இன்றளவும் மூன்றாம் உலகநாடுகளில் மனிதனின் சுதந்திரமான வாழ்வுக்கு ஒவ்வாத நாடுகளும் இருக்கவே செய்கின்றன.
போதிய வருமானம் இன்மை,போக்குவரத்து,அடிப்படை வசதிகள்இன்மை,பாதுகாப்பு மற்றும் புறக்காரணிகளின் அழுத்தம்,சமூக அந்தஸ்து குறைவு போன்றவை இந்த நாடுகளை மூன்றாம் உலகத்தி லேயே வைத்திருக்கின்றன.

இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்று பட்டியலிடப்பட்டிருந்தாலும் உள்ளக அசைவுகளை வைத்துப்பார்த்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னேற்றத்துக்கான வாய்ப்புக்கள் உண்மைச்சுட்டிகள் வாயிலாக காட்டப்படுவதில்லை. உலக ஒப்பனைக்காக அறிக்கை இடப்பட்ட சம்பவங்களையே காணலாம்.

போதிய சம்பளம் இல்லை. பொருள்களின் விலை வாசி கட்டுப்பாடு இன்றி அதிகரிக்கப்படுகிறது, சுயதொழி லுக்கு உத்தரவாதம் இல்லை. 
விவசாயிகளுக்கு சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு, தொழில் ஊக்குவிப்பு முழுமைப்படுத்தப்படவில்லை. மற்றும் இதர தொழில்களையும் உத்தரவாதம் இன்றியே செய்யவேண்டியிருக்கிறது.
இதனூடான வருமானம் போதாமைகாரணமாக வசதிபடைத்தவர்கள் என்று ஐந்து பத்து வருடங்களுக்கு முன் அறியப்பட்டவர்களும் இன்று கஷ்டம் என்று கைவிரிப்பதையே அவதானிக்கமுடிகிறது.

உழைக்க வெளிநாடு
இந்த காரணிகள் மக்களை வேறு நாடுகளுக்கு விரட்டும் தள்ளுவிசைகளாக இருக்கின்றன. வெளிநாடு களுக்கு சென்றால் உழைத்துச் சம்பாதிக்கலாம், வீட்டு வறுமையைப் போக்கலாம், சகோதரங்களை ,தாய் தந்தையை  கவனிக்கலாம் என்ற எண்ணப்பாட்டை மறுபுறத்தில் வெளிநாட்டு இழுவிசைக் காரணிகள் பார்த்துக்கொள்கின்றன.

பெரும்பாலும் கடந்த பத்து இருபது வருடங்களுக்கு முதல் வெளிநாடு சென்றவர்கள் ஆகக் குறைந்தபட்சம் வெளியில் சொல்லக்கூடிய வேலை செய்கின்றனர். அல்லது அந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அந்த நாட்டின் கல்வித் தகமைகளைப் பெற்று நல்ல உத்தியோகம் செய்கின்றனர். இவர்கள் சிரமம் பாராது உழைத்து தமது உறவுகளுக்கு காசு அனுப்ப,அதை கண்கடை தெரியாது இங்கிருப்பவர்கள் செலவளிப்பதைப் பார்க்க,வெளிநாட்டு மோகம் தானாகவே வந்துவிடும்.

""வெளிநாட்டுக்கு போனா நாங்களும் இப்படி வாழலாம்'' என்ற பதிவு பலரிடம் உருவாக கடன்பட்டு கஸ்டப்பட்டு இருக்கும் காணியை,வீட்டை வித்து வெளிநாடு செல்லும் அளவுக்கு அந்த மோகம் உருவெடுத்திருக்கிறது.

காசை அள்ளலாமா?
வெளிநாட்டில் காசு மரத்தில் காய்ப்பதில்லை. இலை உதிர்கால மரங்கள் சிந்தும் இலைகளும் இல்லை. வெளியில் சொல்ல முடியாத உழைப்பே அவை. வெளிநாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளரும் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அந்த பணத்தை பார்க்க முடியும். ஓய்வில்லை. ஆறுதலுக்கு அயலில்யாரும் இல்லை.நோய் நொடி என்றால் கவனிக்க காக்கா கூட இல்லை. இயந்திரமாய் இயங்கவேண்டும். பெரிய படிப்பு படித்தவனும் பத்தாம் தரம் படித்தவனும் ஓரே வேலை தான் செய்யவேண்டும்.
பெரும்பாலான வெளிநாடுகளில் தற்போது வேலை இல்லை என்றாகி விட்டது. அப்படி இல்லை என்றால் மிகவும் அடிமட்ட வேலையே  செய்யவேண்டும்.

நீங்கள் தயாரா?
வீட்டு வளவில் குலை போட்டிருக்கிறது வாழைமரம். இடைப்பழமும் பழுத்துவிடது.விட்டால் காகம் குருவி கொந்திவிடும்.எப்படியாவது அதை வெட்டிப் பக்கத்துக் கடையில் கொடுத்தால் ஒரு 600 ரூபாவாவது தேறும். ஆனால் வீட்டில் இருக்கும் மகன் அதை கடைக்கு கொண்டுபோக வெட்கப்படுகிறார்.

அருகில் இருக்கம் கடைக்கு கைப்பை கொண்டு சென்று பொருள்வாங்க வெட்கம்.கடைக்காரன் போட்டுக்கொடுத்த சொப்பிங் பை வழியில் அறுத்துவிழ வழி நெடுகிலும்,வாங்கிவந்த பொருள்களை வீசிவிட்டு செல்கிறான் பையன்.
இப்படி எங்கள் கெளரவம் வெட்கம் எல்லாம் எங்கள் வீட்டுப் படலையுடன் முடிந்துவிட்டது.

வெளிநாட்டுத் தம்பி
வீட்டுக்குள் ராஜ்ஜியம் செய்த தம்பி வெளிநாட்டுக்கு செல்கிறான்.அந்த நாட்டுக்குள் வாழ்வதற்காக அவன் பெறும் அவஸ்தை இங்கே மறைக்கப்படுகிறது. சொல்லவருவது வேறை விடயம் என்பதால்.
"அரசாங்கத்திட்ட பதிஞ்சா கொஞ்ச காசு தருவாங்க. மற்றபடி வேலை ஒண்டு தேடணும்.'' தெரியாத ஆட்கள். புதிய இடம்.எத்தனை இடர்கள். இன்னும் தம்பிக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி.அறிமுகமாகும் நபர்,"தம்பி இங்க ஹோட்டல்களிலதான் வேலை இருக்கு'' என்கிறார். தம்பி சொல்கிறார். "பரவாயில்லை எங்க எண்டாலும் என்ன வேலை எண்டாலும் ஒண்டு அரேஞ் பண்ணித்தாங்கோ'' என்று.

இதுவரை வீட்டில் "அதில கிடக்கிற பொருளை இதில தூக்கிப்போடாத தம்பி' இப்போ எது வேலை எண்டாலும் பரவாயில்லை எண்டு மாறிட்டான். ஹோட்டல் உதவியாளராக சேரும் தம்பிக்கு முதலில் சாப்பிட்ட கோப்பை கழுவும் வேலை.அந்த ஹோட்டலில இருக்கிற கழிப்பறையையும் அவ்வப்போது சுத்திகரிக்க வேண்டும். தம்பி தனது ஊர் வாழ்வு பற்றி யோசிக்கிறார். கண்ணீர் கழுவுகிறது கழிப்பறையை.

இப்படித்தான் பலரது வேலை கழிகிறது. வெள்ளைக் காரன் செய்த வேண்டா வேலையால் நாடும் உரிமை யும் இழந்த தமிழன் வெள்ளைக்காரனுக்கே சேவகம் செய்கிறான்.கிட்டத்தட்ட இது இழிசேவகம்தான். எங்கள் நாடு அந்தளவுக்கு எங்களை ஆக்கிவிட்டிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து உங்கள் உறவுகள் அனுப்புவது பணம் அல்ல. அக்கரைப் பச்சைக் கனவுகளில் மிதப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பூமுகன்
நன்றி சுடர் ஒளி 

Tuesday, November 12, 2013

வடக்கு பயிரில் களை களைதல்

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு ஆரம்பித்து தமிழர் வாழ்வுக்கான தோற்றுவாயை உருவாக்கியிருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி கூட்டமைப்பு இந்த சாதனை யைப்படைத்திருக்கிறது. மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.
இதுவரை காலமும் பொம்மையாக இருந்த வடக்கு மாகாண நிர்வாகம் புதிய உத்வேகம் எடுத்து பயிர்போல் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தானாகவும்,தட்டுத் தடுமாறியும் முளைத்துக்கொண்ட களைகள் களையப்பட்டு பயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்.

ஆளுநர் இராணுவ அதிகாரி
வடக்கு மாகாண அரசு புதிதாக தமிழ்மக் களால் தெரிவுசெய்யப்பட்டது. ஆனால் தற்போது பதவிவகிக்கும் ஆளுநர் முன்னாள் இராணுவ அதிகாரி.ஜனாதிபதியே ஆளுநரை நியமிப்பார் என்பதற்காக பொருத்தமற்ற ஒரு வரை நியமிப்பது, மக்கள் விருப்பத்துக்கு மாறாக அவரை தொடர்ந்து பதவியில் வைத் திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் தமிழ்மக்களது விருப்பங்கள் தேவைகள் குறித்த சரியான புரிதல் அற்றவராகவே ஆளுநர் இருக்கின்றார்.
இது எதிர்காலத்து நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு கூட்டமைப்பு செயற்படவேண்டும்.

ஆளுநருக்கு அதிகாரிகள்
வடமாகாண சபை அமைவதற்குமுன் வடக்கில் ஒரு பொம்மை நிர்வாகம் இயங்கிவந் தது. அது ஆளுநர் எண்ணுவதற்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பதுடன் தாம் எண்ணுவதையே பொதுக் கொள்கையாகவும் கருதிச் செயற்பட்டது.

அமைச்சு செயலர்களாகவும் செயலராகவும் இருக்கக்கூடிய இவர்கள் பொது நடை முறைகளுக்கு எதிர்மாறானவர்கள் என்பதை அவர்களது செயற்பாடே மக்களுக்கு காட்டிக்கொடுத்தன. மக்கள் விருப்பத்துக்கு மாறான இவர்களது செயற்பாடுகள், அடாவடிகள் சொல்லி அடங்காதவை.
ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் இவர் களது செயற்பாடுகள் சாபக்கேடாக இருந்தன. கல்வித் துறையில் நியமனங்கள், இடமாற் றங்கள்,பதவிநிலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகவும் சூத்திரதாரிகளாகவும் யார் இருந்தனர் என்பது அனை வருக்கும் தெரிந்தவிடயம்.

கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல்  விளையாட்டுப் போட்டிகள், அழைக்கப்படும் விருந்தினர் தெரிவு, நடத்தப்படும் முறை எல்லாமே  ஆளுநரின் காலத்தில்  அவருக்கு விரும்பிய வகையில் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் விரும்புவதை மட்டுமே செய்து பழகிப்போன இவர்கள் இனியும் பழைய பல்லவிதான் பாடப்போகிறார்கள் போல் தெரிகிறது. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதுபோல இவர்கள் இனியும் திருந்தி நல்நோக்கத்துக்காக உழைப்பார்களா என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இவர்கள் குறித்து வடக்கு மாகாண நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்.

பிரித்தோதும் தந்திரவாதி
இன்னும் சிலரும் மாகாண சபைக்குள் உத்தியோகக் கதிரைகளை கைப்பற்றி இருக் கிறார்கள். இவர்களின் சிலர் உலகறிந்த பொஞ்ஞானிகள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச வால்பிடி ஊடகம் ஒன்றின் கதிரையை அலங் கரித்தவர்கள். சிங்கள தேசத்துக்காக  அழுது புலம்புவதே தொழில். தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை கூறி குறித்த ஊடகத்தின் எல்லா நிகழ்ச்சிகளையும் மக்களை வேறு கோணத்தில் சிந்திக்கவைத்ததால், அந்த ஊடகத்தின் மற்றய படைப்புகளைக் கூட மக்கள் புறக்கணிக்கும் அளவுக்கு வெறுப் பேற்றியவர்கள். இந்தப் பொய்யர்கள்  பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே  வளர்ந்தவர்கள். மாற்றுக் கருத்து என்ற பெயரில் மக்கள் விரோதக் கருத்துக்களை மட்டுமே துப்பி வந்தவர்கள். இப்போது ஆட்சி மாறியதும் தாளத்தையும் மாற்றிவிட்டார்கள். உத்தியோகக் கதிரையைப் பிடிக்கும் வித்தை இவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. பொய்யுரைக்கும் இந்தப் பெருமகன்களின் கையில் "மைக்கை' கொடுத்தால் அவர்கள் என்ன என்னவெல்லாம் சொல்வார்கள் என்பது கடவுளுக்குக் கூடத் தெரியாது.

ஒருகாலத்தில் புலிகளின் ஆட்சி நிலவிய போது அவர்களோடு கூட இருந்தவர்கள்தான் பின்னர் குடாநாடுப் படைகள் வசமானதும் அரச கைக்கூலிகளாக மாறி காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டனர். கால மாற்றத்தில் அடைபட்ட பாதை திறந்து, மீண்டும் புலிகள் யாழ்ப் பாணத்துக்கு வந்தபோது இந்தக் கைத்தடிகள் பழையபடி புலிகளோடு ஒட்டிக்கொண்டார் கள். அப்போது படைக்கு சார்பானவர்கள் என்று சொல்லி தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் புலிகளுக்கு போட்டுக்கொடுத்தார்கள். மீண்டும் பாதை அடைபட தாளத்தை மாற்றி மஹிந்த பல்லவி பாடத் தொடங்கினார்கள். அத்தோடு விடாமல் புலிகளின் மீள்வருகை யின்போது உதவி செய்தவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களை வெள்ளைவான் மோட்சம் பெறவைத்தார்கள்.  எதிரிகளைக் கூடநம்பலாம். சந்தர்ப்ப வாதிகளை நம்பவே கூடாது. 


களை பயிருக்கு சாபக்கேடு
தமிழ்மக்களது நிம்மதியை குலைக்க சதிசெய்யும் சிலரை எம்முடன் வைத்துகொண்டு உயிரூட் டங்களை வீசுவதால் பயிர் செழித்துவிடாது. ஆரம் பத்தில் அது செழிப்புற்று வளர்வதுபோல் தெரிந் தாலும் விளைச்சல் அறுவடைக்காலங்களில் பலாபலன்கள் மாற்றப்படலாம்.இப்போது முளைத்திருக்கும் களைகள் கிருமிநாசினிக்கு அழிந்துவிடுபவை அல்ல. அவை வேரோடு களையப்படவேண்டியவை.

இப்போதைக்கு பயிர்போலவே தென்பட் டாலும் பூத்து காய்க்கும் பருவத்தில் அவை சந்தண கோரை களாகவும்,நெற்சப்பி, கோழிச் சூடன், நீர்புல்லு (சேறுபடந்தான்)போன்ற நெற்பயிருக்கு ஆபத்தான பெறுபேறுகளைத் தரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

களைக களை. வாழ்க வடமாகாணப் பயிர்.


Sunday, November 10, 2013

மர்மங்கள் சூழ்ந்த விடுமுறை

வரலாறு தன்கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் காலத் துக்காலம் மாற்றங்களும் எதிர்விளைவுகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழினத்துக்கு இந்த வரலாற்று மாற்றம் எதிர்விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ என்பது போல சில ஊடறுப்புகள், திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழினத்தின் வாழ்வியலையும் இருப்பையும் கேள்விக் குறியின் பக்கம் இழுத்துச்செல்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்குத் தெரிந்த வகையில் தேசிய உணர்வுடன் வரலாற்றுக் காலம் தொடக்கம் இன்றளவும் தமிழ் இனத்துக்கே என ஒரு பெரும் தூணாக இருந்திருக்கிறது. இதற்கென பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தொடக்கம் வருடந்தோறும் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களும் அரும் பணியாற்றியிருக்கின்றனர்.
இத்தகைய உயிரையே துச்சமென மதித்து தேசியத்துக்காகவும் இன விடுதலைக்காகவும் தமிழ் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வரும் ஓர் உயர்ந்த சமூக அந்தஸ்துடைய நிறுவனமாகவே யாழ். பல்கலைக்கழகம் பார்க்கப்படுகிறது.

கடந்தவையும் நிகழ்ந்தவையும்
கடந்த காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அளப்பெரும் பணியாற்றி இருக்கிறது. அதன் உச்சக் கட்டம் "பொங்கு தமிழ்' போராட்டம். உல கத் தமிழரையே ஒருங்கிணைத்த இந்தப் போராட்டம் ஈழத் தமிழ ரின் பிரச்சினையை சர்வதேசத் துக்கு எடுத்துச் செல்வதற்கு மூலக் கூறாக்கியது. மாணவர் சக்தியும் உச்சகட்ட வெளிப்பாடான அந்தப் போராட்டத்தை மையமாக வைத்து அதற்கு முன்னான, பின்னான காலப் பகுதிகளை ஒருகணம்  சிந்திக்க வேண்டியது அனைவரதும் கடமையாகிறது. தேசியத்துக்காக, தமிழ் மக்களின் சுய கெளரவத்துடனான வாழ்வுக்காக இந்தப் பல்கலைக்கழகத்திலேயே எத்தனையோ மாணவர்கள் தம் உயிரை ஈந்திருக்கின்றனர்.
வரலாற்றின் நிர்ப்பந்தம் காரணமாக பட்டதாரிகளாக வெளியேற வேண்டியவர்கள் போர்க்களத்தில் மாண்டு மறவர்களான வலியும் வேதனையும் இன்றும் எம் நெஞ் சங்களைத் தொட்டுச் செல்கின்றன.
எதிர்ப்புக்கள் இடையூறுகள் அன்று இருக்கவில்லை என்று எவரும் கூறிவிட முடியாது. இன்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என அரசு சொன்னால் அன்று அது இல்லை என்ற காலம். அப்படி ஜனநாயகம் இல்லாத சூழலில்  தேசத்துக்கு பணியாற்ற மாணவர்கள் மறுக்கவில்லை. அதற்கு நிர் வாகம் தடையாக இருக்கவும் இல்லை.

அரசின் அறிவிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுநலவாயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்க ளையோ எதிர்ப்பு ஊர்வலங்களையோ நடத்தக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாக குறித்த காலப்பகுதியில் ஒருவார விடுமுறையை அறிவிக்குமாறு குறித்த சில பல் கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. இருப்பினும் அந்த அறிவிப்பில் கல்விச் செயற்பாடுகளைப் பாதிக்காத வகையில் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறுமாறு கோரப்பட்டதாகத் தெரிய வருகிறது.

கட்டாய பணிப்பு
இந்த அறிவிப்பின்படி விடுதிகளில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்திருக்கின்றனர்.
இதேவேளை மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேறி வீடுகளுக்குச் சென்றால் கற்றல் செயற்பாடுகளைத் தொடர முடியாது என்பதற்காக கல்விச் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விடுமுறை
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகளை நிறுத்தி விடுவதற்கு நிர்வாகம் தன்னிச் சையாக முடிவெடுத்திருக்கிறது. "கற்றலுக்கான விடுமுறையை தற்போது விடப்படுகிறது. டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் வழமையாகப் பல்கலைக்கழகம் இயங்கும்.' என கலைப்பீட பீடாதிபதி தெரிவித்தார். இதேவேளை  மாணவர்கள் இந்த காலப் பகுதியில் பல்கலைக்கழகத்து நுழைய முடியாது என கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விரிவுரைகள் முடிவுறவில்லை
இந்த விடுமுறை மாணவர்களின் அரையாண்டுப் பரீட்சைக்கான விடுமுறையே எனவும் டிசெம்பர் இரண்டாம் திகதி வழமையாக பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பமாகும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சாட் டுச் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் விரிவுரைகள் எவையும் முடிவுறவில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கான விரிவுரைகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. அதை டிசெம்பர் இரண்டாம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு நடத்திய பின்னரே கற்றலுக் கான விடுமுறையை பரீட்சையும் நடத்த நிர்வாகத்தினர் திட்டமிட்டி ருக்கின்றனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.

உணர்வை மறுக்கும் அதிகாரம்
பொதுநலவாய மாநாடு நடை பெற்று முடிந்ததும் அடுத்த வாரத் தில் "மாவீரர் வாரம்'  ஆரம்பமா கிறது. எனவே இந்தக் காலப் பகுதி யில் பல்கலைக்கழகம் இயங்கி னால் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவர் எனவும் இதனால் அசம் பாவிதங்கள் எதுவும் நிகழலாம் எனவும் எண்ணும் நிர்வாகத் தலைமை தன்னிச்சையாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பை விடுத்துள்ளது. அதேகாலத்தில் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் எவரும்புக முடியாது என கட்டளையிட்டுள்ளது.

ஊருக்கு நடித்தல்
பல்கலைக்கழகத்தில் போருக்குப் பின்னதான காலப் பகுதியில் சமூக, தமிழ் அரசியல் பங்குபற்றல்கள், பணியாற்றல்கள் மாற்றம் அடைந்து வருகின்றன.  சிலர் தம்மை தமிழ்த் தேசிய வாதிகளாகக் காட்டிக் கொண்டு மறுபுறத்தில் அதற்கு எதிரான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற் கொண்டு வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

மாற்றமடையும் மாணவத் தலைமை
எமக்கு குறித்த காலப்பகுதியில் கிடைக்கப்போகும் ஒரேஒரு சந்தர்ப்பம் கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை. அன்று "பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்ளும் தலைவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கரிசனை காட்ட வேண்டும். இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்த பொதுநலவாய மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்' என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனவீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றை நடத்துவதற்கு மாண வர்கள் சிலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உடன் படவில்லை. "நாம் இதற்கு ஆதரவு தரமாட்டோம். எதிர்காலத்தில் எமக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம்' என்று மாணவர் ஒன்றியத்தினர் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையாம்.

பழி ஏற்றல்
சரி பிழைகளுக்கு அப்பால் சில மாணவர்களது உணர்வு பூர்வமான செயற்பாடுகள் இன்றளவும் மறைந்து போகவில்லை. அவர்களின் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதைப் பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது சில மாணவர்களோ தடுத்து விடமுடியாது. ஆனால் சிலரது திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் அவமானங்களை யாழ்.பல்கலைக் கழக சமூகம் ஏற்றாக வேண்டும். இன விடுதலைக்காக உயிர் நீத்த வர்கள் என்றென்றும் மனதில் பூசிக்கப்படுவர். இதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. உயிர் துறந்துவிட்ட உன்னத மனிதர்களுக்காய் தீபங்கள் சுடர்ஒளிவிடும். அந்த ஒளிக்கீற்றில் திட்டமிட்ட நயவஞ்சக செயற்பாடுகள் அழிந்து போய் விடும். அன்று அவர்கள் கவலையடைவர். கண் ணீர் விடுவர். பெருநெருப்பில் கருவான மறவர் நாள் என்றென்றும் தமிழ் மனதை விட்டகலாது. 

பூமுகன்

நன்றி சூரியகாந்தி 10.11.2013

Sunday, November 3, 2013

சிங்களத்தில் பேசுங்கோ..


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு  மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

ஆனால் இந்திய இலங்கை உடன் படிக்கையின் பிரகாரம் ஏற்படுத் தப்பட்ட அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதனை விட மாகாண சபைக்கு இருக்கக்கூடிய சில அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சில வழிமுறைகள் மூலம் பறித் தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸ் அதிகாரம் மறுப்பு
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்க ளின் மொழி, கலை, கலாசார பண் பாட்டு  முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொலிஸ் நிர்வாகம் அமைய வேண்டும் அதனூடாகவே அமைதியான சூழலை உருவாக்க முடியும். மாறாக தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்த விதத்திலும்   பொருத்தமற்ற சிங்கள மொழி பேசுபவர்கள் தொடர்ந்தும் பணியாற் றுவது இங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக் கும். எனவே வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர்  க.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை யும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்வதற்கு தமது கலாசாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பிரதி நிதியைத் தேடுகின்றனர்.
கருத்து வெளிப்பாடு, பிரச்சினை களை ஒளிவின்றி பேசுதல், நீதி கிடைக் கும் என்ற நம்பிக்கையை கட்டியயழுப் புதல் போன்ற காரணங்களுக்காக தமிழ் மக்கள் தமக்கு சார்பானவர்களையே ‡ பரிச்சயமுடையவர்களையே எதிர் பார்க்கின்றனர்.
ஆனால் வடக்கில் நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பொலிஸ் நிலையங்களில் தமது பிரச்சினைகளை முறையிடச் செல் வோர் மொழி, கலாசாரம், பண்பாடு போன்ற விடயங்களில் நெருக்கடி களை எதிர்நோக்கு கின்றனர்.
சாட்சி கூறச்  செல்பவர்கள் ஏளனம் செய்யப்படுவது, முறைப்பாடு செய்ப வர்கள் அலைக்கழிக்கப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது மொழித் தொடர்பாடல் புரியாததால் இரண்டு தரப்பினருமே வெவ்வேறான அர்த் தங்களை கொள்வது என்று மொழி நிலை முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பொலிஸ் பேச்சாளரின் மறுப்பு
புதிதாக தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் வடக்குக்கு இல்லை. ஒரு தொகுதி தமிழ் பொலிஸார் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். தவிர தமிழ் தெரிந்த பொலிஸார் அநேகமானவர் அங்கு கடமையாற்றுகின்றனர். இதற்கு மேலதிகமாக ஆளணிகளை பெருக்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. வடக்கில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் உள்ளனர். அங்கு தமி ழில் முறைப்பாடு செய்யவும் முறைப் பாட்டுப் பிரதியை தமிழில் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் இருக்கின்றன.
எனவே முதலமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் பேச்சாளர் மறுத்திருக்கிறார். 

தமிழ் தெரியாத பொலிஸார்

இரு தரப்பு வாதங்கள் இப்படி இருக்க இன்றும் வடக்கில் தமிழ் தெரியாத பொலிஸார் கடமையில் இருக்கின் றனர்.
ஓர் இடத்தில் நடக்கும் வன்முறை சம்பவம் தொடர்பில் அதை அவதா னிக்கும் ஒருவர் உடனடியாக தொலை பேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முடியாத நிலை காணப் படுகிறது.
சமூக அக்கறை காரணமாக பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவரிடம் "" தமிழ் தெரி யாது. சிங்களத்தில் பேசுங்க'' என்று கூறுகிறார் பொலிஸ் அதிகாரி என்று கவலையுடன் தெரி விக்கிறார் அந்த அக்கறைவாதி.
இன்றும் பல பொலிஸ் நிலை யங்களில் சிங்க ளத்தில் முறைப் பாடு கள் பதிவு செய் யப்படுகின்றன. முறைப்பாடு செய்ய போகும் ஒருவர் தமிழ் தெரிந்த பொலி ஸார் வரும் வரை பொலிஸ் நிலை யத்தில் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வீதிகளில் போக் குவரத்து ஒழுங்கு முறைகளை சோதனையிடும் சிலருக்கு தமது நிலைப்பாட்டை சரியாக விளங்கப்படுத்த முடியாமல் தமிழ் மக்கள் திண்டாடுகின்றனர்.
அனுமதிப் பத்திரத்துடன் தமது தேவைகளுக்காக காட்டு மரங்கள் , கட்டடப் பொருள்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் மக்களை இடை மறிக்கும் பொலிஸார் தேவையற்ற வகையில் அணுகுகின்றனர். இது இலஞ்சம் வரை செல்கிறது. வன்னிப் பகுதியில் பொலிஸார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய சம்பவங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகிறது.

பொலிஸ் கடமையில் இராணுவம்
இவற்றை விட பொலிஸார் செய்ய வேண்டிய பல வேலைகளை வட பகுதியில் இராணுவத்தினர் செய்யும் நிலை அவதானிக்கப்படுகிறது.
விபத்து நடைபெறும் இடம் அல்லது குழு மோதல், பிரச்சினைகள் இடம் பெறும் இடங்களுக்கு முதலில் இரா ணுவத்தினரே வருகின்றனர். இவர் கள் வந்தவுடன் தாமே நீதிபதிகள் போலவும், பொலிஸார்கள் போல வும் நடந்து கொள்கின்றனர். தமக்கு வேண்டியவர்கள் எனில் உடனடி யாக அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி பாதிக்கப்பட் டவர்களை மிரட்டி வெளியேற்றி விடு கின்றனர். குறிப்பாக தென்பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்களின் தறிகெட்ட ஓட்டத்தால் விபத்துக்கள் நேருகின் றன. ஆனால் சம்பவ இடத்திற்கு வரும் இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
தடயங்களை அழித்தல், குற்றத்தை நியாயப்படுத்தல், குற்றவாளிகளை தப் பிக்கவிடுதல் போன்ற செயற்பாடு களில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு என்ற போர்வையில் வீதியில் செல்பவரை இடைமறித்து தொந்தரவு செய்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் கடை உரிமையா ளர் ஒருவர் தனது பாரவூர்தியை கடைக்கு முன் நிறுத்தி வைத்ததற் காக இராணுவத்தினரால் அச்சுறுத் தப்பட்டுள்ளார். மறுநாள் காலை கடையை பூட்டி விட்டு விசாரணைக்கு வரு மாறும் அழைக்கப்பட்டிருக்கிறார். இது கடந்த வாரம் முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம்.
இப்படி பொலிஸாருக்கு உரித்தான கட மைகள் பலவற்றை வட பகுதியில்  இராணுவத்தினர் செய்வதை அவ தானிக்க முடிகிறது.

மக்களுக்கு அச்சுறுத்தல்

ஜனநாயக   நாட்டில் பொலிஸ் நிர்வா கம் துப்பாக்கிகள் அற்ற சாதாரண மனித பண்பு கொண்ட நிர்வாக முறைமை. இங்கு மக்கள் பயமின்றி  சட்ட திட்டங் களுக்கு கட்டுப்பட்டு ஒழுகுவர். ஆனால் இலங்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. பொலிஸாரும் இரா ணுவத்தினரை போன்று அடக்கு முறைவாதிகளாக தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர். இதனால் தற்போதும் பொலிஸ் மற்றும் இரா ணுவத்தினரை மக்கள் எதிரிகளாக நோக்குகின்றனர்.

நிலைமை மாற வேண்டும்

வடக்கில் அதிகார தொனியிலான பொலிஸ் நிர்வாகம் மாற்றப்பட்டு மக்கள் இயல்பாகச் சென்று தமது பிரச்சினைகளை முறையிட்டு தீர்த் துக் கொள்ளும் நிலை ஏற்படுத்தப் பட வேண்டும்.
ஒரு சம்பவம் தொடர்பாக சாட்சி சொல் பவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாறாக அவர்களைத் தொந்தரவு செய்வதன் மூலம் சாட்சியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களி ருந்து நழுவிச் செல்லும் முறையே தோற்றுவிக்கப்படும். தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைமை யில் ஈடுபடுத்தப்பட வேண்டும். முறைப் பாடு பதிவு செய்யச் செல்பவர் தமிழ் பேசும் அதிகாரிக்காக காத்திருக்கும் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்ப் பொலிஸாரை
இணைத்துக் கொள்ளல்

பொலிஸ் தரப்பு தமிழ் இளைஞர் யுவதிகளை சேவையில் இணைத் துக் கொள்வதற்கு விரும்பவில்லை. இதுவே பொலிஸ் பேச்சாளரின் கருத் தில் இருந்து வெளிவருகிறது.
ஆனால் இந்த மனோநிலை மாற்றப் பட வேண்டும். நல்லிணக்கம் ஏற் படுத்தப்பட வேண்டுமாயின் நிர் வாக கட்டமைப்புகளிலும் மாற்றீட்டு கொள்கைகள் அவசியம்.
அதாவது தமிழர்களுக்கு அதிகாரங் களை வழங்குவதால் நெருக்கடி ஏற் படும் என்ற இனத்துவ எண்ணக் கருவை விலக்கி மாகாண அதிகாரங் களுக்கு ஏற்புடையதாக நிர்வாக கட்ட மைப்பை செயல் உரு பெற செய்ய வேண்டும்.

கருத்துக்கு எதிர்க் கருத்து
வட மாகாண சபை இயங்க ஆரம் பித்தது முதல்  சபையால் வெளியி டப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் அரச தரப்பில் இருந்து எதிர்க் கருத்தே வெளிவருகின்றது. இந்த நிலை எதிர்காலத்தில் நெருக்கடியையே  உருவாக்கும். தமிழ்த் தரப்பு தமக் கான உரிமை விடயங்கள் வலு வாக  இருக்க வேண்டும் என்று விரும் புகின்றது.
அதே சமயம் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்க அரச தரப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஒருவர் கூற அதற்கு மறுப்பு கூறுவ தற்கு காத்திருப்பது அபாயத்தின்  விளிம் புகளுக்கே அழைத்துச் செல்லும்.

நன்றி சூரியகாந்தி(03.11.2013)

Monday, October 28, 2013

உயிர் பறிப்புக்கு யார் காரணம்?

சதீஸ்குமாரின் எதிர்கால கனவு தட்டா தெருச்சந்தியில் கலைந்துபோயிருக்கிறது. அந்த நிமிடம் வரை எத்தனையோ ஆசைகளைக் கொண்டிருந்த அவனது பயணத்தில் இணை பிரிந்து போயிருக்கிறது. திருமணம் முடித்து ஏழு மாதங்களேயான சதீஸ்குமார் கீர்த்தனா மீது வைத்திருந்த பாசம் தட்டாதெருவில் அவள் குற்று யிராய் கிடக்கையில் கொட்டித் தீர்த்தது. பார்ப்பவர்கள் மனதை பிசைந்த அந்தக் கொடூர விபத்துக்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தால் என்ன போன உயிர் திரும்பிவந்து விடுமா?
ஆசிரியரான சதீஸ்குமாரும் மனைவியும்
பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிந்தனர். இரவு 10 மணி இருக்கும் யாழ்.நகரப்பக்கம் இருந்து கே.கே.எஸ். பிரதான வீதியூடாகச் சென்ற இவர்கள் தட்டா தெருச்சந்தியில் நல்லூர் வீதிக்குத் திரும்பியுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 மீற்றருக்கு முன்பாகவே இவர்களது மோட்டார் சைக்கிள் நல்லூர் வீதிக்குத் திரும்பும் பக்கமாக செலுத்தப் பட்டிருக்கிறது. அப்படியாயின் பின்னே வரும் வாகனங்கள் மோட்டார் சைக்கிள் நகர்வை கருத்தில் கொண்டு தமது வழித்தடத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும்.
இவை எல்லாம் சிறு பொழுதில் வேறு விதமாக நடந்தேறிவிட்டன. வீதியின் முக்கால் பங்கைக் கடந்துவிட்ட மோட்டார் சைக்கிளை துரத்திவந்து வேண்டுமென்றே இடித்ததுபோல் விபத்து நடந்திருக்கிறது.

இராணுவ பஸ்
மோட்டார் சைக்கிளை மோதியது இராணு வத்தினரை ஏற்றிவந்த பஸ். இந்த பஸ் பின் பக்கமாக மோட்டார் சைக்கிளை மோதியிருக் கிறது. அதுவும் பஸ் செல்லவேண்டிய பக்கத் துக்கு எதிர்ப்பக்கமாக வைத்தே மோதியுள்ளது. பஸ்சாரதி மீதே முழுப்பிழையையும் சுமத்து கின்றனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள். யார் மீது பிழை இருப்பினும் ஒர் உயிர் காவுகொள்ளப்பட்டுவிட்டது. இதற்கு எவரைத் தண்டித்தாலும் தீர்வுகிட்டாது.

ஆபத்தான அமைவிடம்
வீதி அகலிப்புக்குப் பின்னர் தட்டாதெருச் சந்தி ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. அதாவது கே.கே.எஸ்.பிரதான வீதி மானிப் பாய் வீதி நல்லூர் வீதி என்பன இடைவெட்டு கின்றன. இவை நேருக்கு நேராக இன்றி சற்று முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது ஆபத் தாக உள்ளது. குறிப்பாக வீதி விதிமுறைகளை சிலர் சற்றேனும் கடைப்பிடிக்காமல் இந்தக் கடவையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மானிப்பாய் வீதியில் இருந்து கே.கே.எஸ். வீதிக்கு உட்புகும் ஒருவர் நல்லூர் வீதிக்கு செல்லும்போதும், நல்லூர் வீதியில் இருந்து மானிப்பாய் வீதிக்குச் செல்லும் போதும் வீதி விதிமுறை எவற்றையும் சிலர் பின்பற்று வதில்லை. இதனால் இந்தச் சந்தியில் அடிக்கடி போக்குவரத்துத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சமிக்ஞை இல்லை
வீதிப் புனரமைப்பு பணிகள் நீண்ட காலமாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் பிரதான வீதி யில் வீதிக்குறியீடுகள் எவையும் போடப்பட வில்லை. இதனால் வெளியிடத்தில் இருந்து வரும் சாரதிகளுக்கு வீதி அமைப்பை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனால் புதிய வீதியில் பறந்துவரும் இவர்களது கால்கள் பிறேக்கில் முட்டுவதில்லை. இதனாலும் விபத் துக்கள் தவிர்க்கமுடியாததாகின்றன.
இராணுவ பஸ்சும் வேகக்கட்டுப்பாட்டை மீறிக் கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே தமது தடத்துக்கு எதிர்ப்பக்கம் சென்றுள்ளது.

சாட்சிக்கு மறுத்த பார்வையாளர்
சம்பவம் நடந்ததும் பொலிஸாரும் இராணு வத்தினரும் குவிந்தனர். சந்தி நிறைந்த சனக் கூட்டம். பஸ்ஸிலும் இராணுவத்தினர். அதை விட சி.ஐ.டி. என்று கூறும் சில சிவில் சிக்கல் களும் நின்றன.
இதன்போது பொலிஸார் சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரிக்க பொலிஸார் அழைத்த போது எவரும் முன்வரவில்லை. தமக்கு இத னால் ஆபத்துவரும், பொலிஸாருடன் இழுபட வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து நழுவிவிட்டனர். ஒரு ஆசிரியரைத்தவிர.
இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் பலர். இவர்கள் எவரையும் தண்டிக்கமுடியாது. அப் படி தேடித்தேடித் தண்டித்தாலும்கூட பிரிந்த உயிரைப்பெற்றுவிடமுடியாது.
குற்றம் இழைத்தவர் யார் என்ற கேள்விக்கு எல்லாத்திசைகளிலும் விரல்கள் நீளும். கண்ணீர் துயரமும் நம் உயிருக்கு நாமே பாதுகாப்பு ஆனாலும் தேடிவரும் வீண் இழப்புக்களை தவிர்ப்போம்..

நன்றி சுடர்ஒளி 09-15.ஒக்ரோபர் 2013

தந்தி அறுந்த வீணை


நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.

தொழில் நுட்பத்தின் பாதிப்பு வடக்கு மக் களை கண்திறக்கவைத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். புத்திசாதுரியமான சிந்தனை களை மக்கள் கொண்டுள்ளனர். சொல்லப் போனால் பத்துவருடங்களுக்கு முன் இருந்த வடபகுதி மக் களுக்கும் இப்போதுள்ள மக்களுக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சிக்கு இவர்கள் இடமளித் திருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் சாக்கடை களுக்குள் இருந்து மீள்வதற்கான இவர்களது துணிச்சலும் சிந்தனையும் இதைப் பறைசாற்று கின்றன.

தவறான கணிப்பு
நீண்டகாலப்போர் மக்களை நிலைகுலையச் செய்ய அதை சாதகமாகக் கொண்டு சிலர் அரசி யல் நகர்வை மாற்றியிருந்தனர். இதுவரை அடி நாதமாக இருந்த கொள்கைகளும் கோட்பாடு களும் கைவிடப்பட்டு மக்களை சலுகை சார்ந்த மனவிருப்புமாற்றத்துக்கு கொண்டு செல்ல இவர்கள் முயற்சித்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இவர்களது சூழ்ச்சி நகரல்லாத கிராமமட்டத்தில் சாத்தியமானதை இவர்கள் உணர்திருந்தனர். குறிப்பாக கரையோரப் பகுதி கள், வளர்ச்சி குன்றிய கிராமங்கள் இவர் களது மாற்று அரசியலுக்கு வலுச்சேர்த்தன.
சிறு வெற்றிகளை கொண்டு ஏமாற்றுவாதிகள் பொது முடிவுக்குவந்தனர். அதுதான் சலுகை அரசியல்.

சமூகமயமாக்கம்
கடந்த ஓர் இரண்டு சதாப்தம்வரை பண் டிகைகள், கோயில் திருவிழாக்கள், கொண் டாட்டங்கள் வாயிலாக சமூகமயப்பட்டுக் கொண்ட மக்கள் இன்று அதிலிருந்து மாற்றம் பெற்று சமூக வலைத் தளங்கள் ஊடாக சமூ கத்தைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.( நன்மை,தீமைக்கு அப்பால்) அரசியல் பெரு எழுச்சி கண்டுள்ளது.
தவறான தகவல்களுடன் சலுகை, ஆசை வார்த்தை என்று மக்களை நம்பவைத்து அவர் களை தமது ஆதரவாளர்களாகக் காட்டி, தமது பலத்தை வெளிக்கொணர்ந்த சில அரசியல் வாதிகள், பதவிகளைப் பெற்றதும் தாம் முன்னர் செய்த அரசியலை மறந்து, அல்லது  நியாயப் படுத்திக்கொண்டு அடுத்த சந்ததியிடமும் அதை விற்பனைக்காக அறிமுகப்படுத்த முயற்சித் துள்ளனர். இது முற்றிலும் தவறானது.
காரணம் இவர்கள் நம்பிய மக்கள் இன்று உலகத்து மூலைமுடுக்கெல்லாம் சென்று வரு கின்றனர் என்பது புரியாமையே.
நடந்துமுடிந்த தேர்தலில் இரு ஆசனங் களைக் கைப்பற்ற பெரும்பாடுபட்ட கட்சிக்கு இன்று ஞானம் பிறந்திருக்கிறதாம்.

மறக்கப்பட்ட சின்னம்
கடந்தவாரம் அவசர கூட்டம் நடத்திய அமைச்சர் ""இனி நாங்கள் அதில கேட்பம்'' என்று தீர்மானிச்சவையாம். ஈழமக்களுக்கான ஜனநாயகப்போராட்டம்  மீள ஆரம்பிக்கப் படுகிறது.
சலுகைக்கும் உரிமைக்கும் இடையிலான கயிறிழுப்பு முடிவடைந்ததும் இந்த முடிவு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டுபண் ணியுள்ளது. இவர்களது வேடம் இன்னும் நிறம் மாறவுள்ளது. இன்னும் பயங்கரங்களைத் தரப் போகிறது என்றதே மக்கள் பயம்.
கடந்த தேர்தலில் ஜனநாயக விரோத நட வடிக்கைகள் பல அரங்கேற்றப்பட்டன.இவை இயலாமையின் வெளிப்பாடுகள். தாம் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் இப்போது தமது பாதை பிழைத்திருப்பதை உணர்ந்திருக்கின்ற னர்.
பாதையைப் புனரமைக்க எத்தணை காலம் எடுக்குமோ.....லயம், நாதம் பிழைத்திருக் கிறது...... சூரியன் இருக்கும் திசை தெளி வில்லை. உத்தேசப்படி நமஸ்காரம்! நமஸ் காரம்!! நமஸ்காரம்!!!.()

நிறுத்து: உயிராபத்து!


அபிவிருத்தி பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் கிளிநொச்சிக்கு ரயில் வந்திருக்கிறது. இது பொதுப்போக்குவரத்தின் திருப்புமுனைதான். அவசரக்காரர்களின் தேவைகருதி அரைகுறை பணிகளுடன் வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சேவை மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சில இடங்களில் சமிஞ்ஞைகள் இருந்தாலும் பலஇடங்களில் அவை அமைக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து தவிர்க்கமுடியாததாகியுள்ளது.

குற்றவாளிகள் என்று அரசுப்பக்கம் கைநீட்டி னாலும் தவறுகள் பொதுசனங்கள் மீதும் இருக்கிறது.

புதிய வரவு
ரயில் வடக்குக்கு நீண்ட காலத்தின்பின் புதிய வரவாக உள்ளது.இதனால் ரயில் போக்கு வரத்தின்போதான விதிமுறைகள் கட்டுப்பாடு கள் குறித்த அறிவு பெரும்பாலான மக் களிடத்து இருப்பதை எதிர்பார்க்கமுடியாது.
எனவே மக்களை விழிப்படைய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கடமையாகும். இல்லாதவிடத்து மக்களின் கட்டுமீறல்கள் உயிராபத்துக்களை ஏற்படுத் தும். அதன்பின் ஆர்ப்பாட்டம் நடத்து வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.
ரயில் வரவுக்காக கனகபுரம் வீதியில் இரு பக்கமும் ரயில் கடவைகள் மூடப்பட்டி ருந்தன. "என்ன குறுக்கால போவார் கம்பிய றோட் டில் போட்டிருக்கிறாங்கள்' என்பதுதான் பலபேரது நினைப்பு. நினைப்பு மட்டுமல்ல அதை தாண்டியும் சென்றுவிட்டனர். ரயில் வந்துகொண்டிருந்தது. ஐந்து நிமிடங்களில் கனகபுரம் வீதியை ரயில் கடக்கவேண்டும். நல்லவேளையாக கடமையிலிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துக்கொண்டனர்.

குறுக்கு வீதிகள்
ஏd9 வீதிக்கு மேற்குப்பக்கமாக ரயில்பாதை செல்கிறது. இந்தபாதையை இடையிடையே கிராமப்புற வீதிகள் குறுக்கறுக்கின்றன. இவற் றுக்கான பாதுகாப்பு கடவைகள் முழுமைப் படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு கடவையையே மீறிச் செல்லும் மக்கள் பாதுகாப்பற்ற கடவையில் பொறுமை காப்பார்களா என்ன?

மக்கள் பொறுப்பு
விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக ரயிலையோ,அதிகாரிகளையோ உடனடியாகக் குற்றம்சாட்டிவிடமுடியாது. பொதுமக்கள் தான் பொறுப்புடனும், விழிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பரீட்சார்த்த சேவையிலேயே கிளிநொச் சியில் ஒரு பலியயடுப்பு நிகழ்ந்திருக்கிறது.இதை மக்கள் நினைவில்கொள்ளவேண்டும்.
தற்போது கிளிநொச்சிவரை ரயில் சேவை இடம்பெறுகிறது. தினமும் மூன்று சேவைகள். நேர அட்டவணைப்படி குறிப்பிட்ட கட வைகளைத் தாண்டிச்செல்லும் நேரத்தை மக் கள் அவதானித்துக்கொள்ளவேண்டும்.
அதிகாரிகளது அறிவிப்பை முந்திக்கொண்டு, மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுவே சாத்தியம்.
ரயில்பாதைகளில் குழந்தைகளை விளை யாடவிடுவது, சிறுபிள்ளைகளைகளையும் முதி யவர்களையும் தனியே ரயில்பாதையை கடக்க விடுவது, ரயில் வருவதற்கான சமிஞ்ஞை விளக்கு களை அலட்சியம் செய்வது போன்ற காரியங் கள் உயிராபத்தை உண்டுபண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்து விடும். அதன்பின் ஏங்குவதில் பயனில்லை. தமது உயிரைப்பாதுகாத்துக்கொள்ள ஒவ் வொருவரும் அக்கறை கொள்ளவேண்டும். இது பொது விழிப்புணர்வாகிவிடும். புதிய வரவை இழப்புக்கள் இன்றி வரவேற்போம்.

நன்றி சுடர்ஒளி 18-24.09.2013

கணக்குக்காட்டல்


அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்

"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும்  நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில்  வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து  தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய  நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.

பொருளாதார முன்னேற்ற அறிக்கை

நவநீதம்பிள்ளையை உலக பொருளாதார, அபிவிருத்தி ஆய்வாளராக நினைத்து ஏகப் பட்ட  பைல்களுடன் வந்திறங்கிய வடமா காண அரச அதிகாரிகள்,போருக்குப்பின்னர் கண்டுள்ள  அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மல்ரி மீடியா புரஜெக்ரர் மூலம் "பிரசன்ரேசன்'  நடத்தினர். எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார் நவி.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரகாரம்  இலங்கையில் மனிதஉரிமைகள் விட யத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து  ஆராயும் பொருட்டு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தனது நேரடி அவதானிப் புக்காக வடபகுதியை தேர்ந்தெடுத்தார்.  குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியை அவதானிப்பது அவரது நோக்கமாக இருந்தது.
கிட்டத்தட்ட போர் இடம்பெற்ற இடத்தை நவிப்பிள்ளை பார்வையிட்டாரா என்பது  சந்தேகமே. ஏனென்றால் உண்மையில் போர் நடைபெற்ற இடங்கள் விசேடமாக  உருமறைப் புச்செய்யப்பட்டுவிட்டன நவி வருகைக்கு முன் னரே. அதனால் அவரை  ஆச்சரியப்படுத்து மளவுக்கு ஒன்றும் இருக்கவில்லை. பதிலாக அரச அதிகாரிகள்  நடந்துகொண்ட விதமே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
வடக்கு ஆளுநர்,செயலர் உட்பட ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த அரச அதிபர்களும்  வடக்கில் நடைபெற்ற, நடைபெறும் அபி விருத்தி வேலைகளை விளக்கினர்.
வடக்கின் வசந்தம், மஹிந்தோதைய அபி விருத்திகள் குறித்து ஜனாதிபதி, அமைச்சர் களது  வர்ணப்படங்களை பின்னணியாகக் கொண்ட "சிலைற்றுகள்' விரிந்து கொண்டி ருந்தன.
"ஓ! அப்படியா?' என்று பார்த்துக்கொண் டிருந்தார் நவி.
ஆர்வத்தின் மிகுதி ஒவ்வொரு அரச அதிகாரிகளது முகத்திலும் தெரிந்தது. அவர் கள் பார்வையில் நவிப்பிள்ளை ஒரு பொரு ளாதார முன்னனேற்ற ஆய்வாளராக இருந் திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருந் திருக்கும்? எதுவோ எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுதான்.விட்டுவிடாமல் விளாசுவோம் என்று எல்லா அபிவிருத்தி வேலைகளையும் பட்டியலிட்டனர் அவர்கள்.
ஒரு அதிகாரிகூட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.

உரிமை வேறு அபிவிருத்தி வேறு

பொதுவான உலக நடைமுறைகளின் கீழ் ஒருநாட்டில் வாழும் மக்கள் சட்டரீதியாக வும் பண்பாட்டு, கலாசார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் அம்சங்களை உரிமை களாக வகைப்படுத்தலாம். இவை உலக வரன்முறைக்கமைய மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவை.
உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத் துருக்கள்  சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என் பதாகும். உரிமைகள் தொடர்பாக தற்காலத் தில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை.இது, ஒரு நாடு,ஒரு இனம்,ஒரு குழுவுக்கு இயற்கையாக அமைந்த உரிமையைக் குறிக்கிறது.இதில் எந்த மனித சக்தியும், முறையாக மாற்றம் செய்ய முடியாது. இரண்டாவது, சட்ட உரிமை.
இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக் கப்படுவதும், அரசால் நடை முறைப்படுத்தப் படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியது மான மனித உருவாக்கம்.
அபிவிருத்தி என்பது இதிலிருந்து மாறுபடு கிறது. அதாவது ஒருநாட்டின் சமூக,பொருளாதார நிலைகளில் படிப்படியாக ஏற்படுத் தப்படும் வளம்மிக்க மாற்றமே அபிவிருத்தி எனப்படுகிறது.
மனித உரிமைகள் அபிவிருத்திக்குள் உள்ள டக்கப்படகூடியவை என்ற அடிப்படை நிலவி வந்தாலும் எல்லா மட்டங்களிலும் இவை பின்பற்றப்படாமையே முரண்பாட்டுக்கு கார ணமாகிறது.
இலங்கையில் தற்போது பெரும்பாலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முரண்பாட்டு டன் கடியவையாகக் காணப்படுவதே பிரச் சினையாகும். தேசிய கொள்கைகளுக்கு உட் பட்ட அபிவிருத்தி திட்டங்களால் இனம் சார்ந்த, சமூகம்சார்ந்த உரிமைகள் மதிக்கப் படாத நிலை தோற்றுவிக்கப்படுகிறது.
இதுவே ஆரம்பம் தொட்டு இன்றுவரையான முரண்பாட்டு தோற்றுவாய்களாகக்காணப் படுகின்றன.
இந்த அடிப்படையில் நவிப்பிள்ளையிடமும் எமது அதிகாரிகள் முரண்பாட்டு தோற்று வாய்களைக் காண்பித்து, இங்கு மக்களுக்கு பிரச்சினை கிடையாது என்று விளம்பியுள்ளனர்.
நவிப்பிள்ளையின் பயணத்தின் நோக்கம் அது அல்ல என்று அரச அதிகாரிகளுக்கு நன்கு தெரி யும். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தத் தமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்த வேண் டியது அதிகாரிகளது கடமையாக்கப்பட்டி ருந்தது. அபிவிருத்தி குறித்த முன்னேற்ற அறிக்கை மூலமாவது சில சம்பவங்களை மூடி மறைக்கவோ அல்லது திசை திருப்பி விடவோ முடியும் என்பதே அரசின் நோக்கம். இதற் காகவே அரச அதிபர்கள் அபிவிருத்தியைப்பட் டியலிட பணிக்கப்பட்டனர்.
எது எப்படியோ நவிப்பிள்ளை உண்மை நிலையை தெளிவாக அவதானிப்பது போலவே அவரது அனைத்து செயற்பாடுகளும் இருந்தது என்பதை அவதானிக்கமுடிந்தது. அவரது அவதா னிப்புக்களும் நடவடிக்கைகளும் அடுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தில் தெரியவரும்.

நன்றி சுடர்ஒளி 04-10.09.2013

சாப்பிட்டுப் போங்கோ.....!


"நாளைக்கு மீற்றிங்' என்ற தகவலோடு இன்று தான் பல அலுவலகங்களுக்கு கடிதம் வந்து சேர்ந்தது. முக்கிய கலந்துரையாடல் இருப்பதால் சம் பந்தப்பட்ட அனைவரையும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் அன்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.

பலவருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி தற்போதுதான் ஆசிரிய உதவியாளர் களாக மிகக்குறைந்த கொடுப்பனவுடன் உள்வாங் கப் பட்டவர்கள், சமுர்த்தி ஊழியர்கள்,அலுவலக பணியாளர்கள் என்று அனைவருக்கும் இந்த அவசர அறிவிப்பு அந்தந்தப் பிரிவுகளின் ஊடாக அனுப் பப்பட்டிருந்நது.
புதிதாக நியமனம் பெற்றவர்கள் என்பதால் கட்டாயம் அந்த "மீற்றிங்கில்' கலந்துகொள்ள வேண் டிய  ஏற்பட்டது. காரணம் "வேலை இல்லாமல் செய்துபோடுவினம்' என்ற பயம் தான்.
"இவ்வளவு காலமா கஸ்ரப்பட்டு ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதையும் இப்பிடி ஏதும் சாட்டா வைச்சு பறிச்சிட்டா அதோ கதிதான்'
இந்த ஏக்கத்தோடு இரவோடிரவா வெளிக் கிட்ட பாதிப்பேர், விடியக்காலம வெளிக்கிட்ட பாதிப்பேர் என்று ஒரு அறுநூறுபேருக்கு மேலான வர்கள் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்திட்டினம்.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப் பாணம் என்று தூர இடங்களில்  இருந்து இவர் கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவசரக் கூட்டம் எண்டதால பலபேரது நினைப் பும் பேச்சும் "இது தேர்தல் மீற்றிங்' எண்டு தான். ஆனால் கூட்டத்தில எந்த அரசியல்வாதியும் கலந்து கொள்ளவில்ல. அதைவிட அரசியலும் கதைக் கல்லை. இதுதான் ஏற்பாட்டாளர்களது கெட்டித்தனம்.
போன வாரம் நவிப்பிள்ளைக்கு காட்டத் தயா ரிச்ச அபிவிருத்தி அறிக்கைகளைதான் இவர்களுக் கும் போட்டுக்காட்டி, பாருங்கோ நாட்டில எவ்வளவு அபிவிருத்தி வேலையள் நடந்து கொண்டு இருக்கு எண்டுறதுக்குத் தான்  இந்த மீற்றிங்.
வடக்கில் புதிதாகநியமனம் பெற்றுக்கொண்ட வர்களுக்கான கலந்துரையாடலே அது. கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் வடக்கு ஆளுநர் தலைமையில் தான் கூட் டம் நடைபெற்றது. வடக்குக் கான அரச அதிகாரிகளும், அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டு தத்தமது அமைச்சு, திணைக்களங் களில் நடந்த, நடந்து கொண்டிருக் கும் அபிவிருத்தி வேலைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இடையிடையே ஆளுநர் வந்து ""உங்கள் எல்லாருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கு கட்டாயம் சாப்பிட்டுட்டு போங்கோ'' எண்டு அறிவிச்சாராம்.  பெரிய கைதட்டல் ஆரவாரம் அவருடைய அறிவிப்புக்கு.
ஒருமாதிரி கூட்டம் முடிஞ்சுது. அதிகாரிகள் வெளி யேறி விட்டனர். அவசர அவசரமாக மேடைக்கு வந்த ஒருவர் ""யாழ்ப்பாணத்தில இருந்து வந்தவை யளுக்கு சாப் பாடு ஒழுங்குபடுத்தேலை. நீங்கள் வீட்டைபோய் சாப்பிடுங்கோ. வெளிமாவட்டத் தில இருந்து வந்த எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு'' என்று அறிவித்தார். அறிவிப்பை கேட்டதும் யாழ்ப் பாணத்தில இருந்து வந்த எல்லோரும் வீட்டுக்கு புறப்பட வெளி மாவட்டக்காரருக்கு, ""கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ சாப் பாடு வந்திடும்'' எண்டு தகவல் கொடுத்திருக்கினம். ஒருமணி, ஒன்றரை, இரண்டு என்று நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் சாப்பாடு தான் வந்த பாடாக இல்லை.
 தூரத்தில இருந்து முதல்நாளே வந்தவை, அதிகாலை வெளிக்கிட்டவை என்று பலபேர்.... பொறுமை இழந்து கூட்டம் கூட்டமாகப் புறப்பட ஆரம்பித்தனர்.
அப்பாடா !கொஞ்ச நேரத்தில கூட்டம் கலைஞ் சிட்டுது. ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க சந்தோசம். ஒருமாதிரி ஏமாத்தி அனுப்பிட்டம் எண்டு.
யாழ்ப்பாணம் பஸ்ரான்ட் வரை ஓட்டோக் கள், தனியார் பஸ்களில் தாவி வந்து சேர்ந்த பலர் கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக் கொண்டிருந் திச்சினம். அதில எனக்கு அறிஞ்ச ஒருத்தரும் இருந்தார். ""அண்னை என்னாச்சு.என்ன இந்தப் பக்கம்?'' எண்டு கதையக் குடுக்க..
""நாங்கள் ஆளுநற்ர மீற்றிங்குக்கு வந்தனாங்க. ஊருக்குப்போக நிக்கிறம்.கூட்டத்தில சாப்பாடு தாறம் தாறம் எண்டு அறிவிச்சாங்கள். தரல்ல. அதுதான் எங்கட ஆக்களின்ர அறிவிப்புக்கள் எப்பிடி எண்டு பெடியளோட கதைச்சுக்கொண்டு நிண்டன். தம்பி இதை பேப்பரில எழுதிடாதை. வெக்கக்கேடு எங்களுக்குத் தான்'' சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிப்புறப்பட்டுவிட்டார் அவர்.
பாத்தீர்களா  இந்த விருந்தோம்பல் பண்பை. கிடைச்சா எங்களுக்கு இப்பிடி  இன்னும் கொஞ்சபேர் கிடைக்கணும். நல்லா வருவீங்கள். போங்கோ.

நன்றி சுடர்ஒளி11 -17.09.2013

குருக்கள் செய்தால்....



""ஆலயம் தொழுவது சாலமும் நன்று... ஆனால் நல்லூரானை அரசியல் வாதிகள் தொழுவது நன்றல்ல.''
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கருத் தில் உடன்பாடு இருக்காது. ஆனால் சில வேளை களில் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.
எங்கள் நாட்டு அரசியல் திட்டங்களும் அர சியல் விண்ணர்களும் இனிவரும் நாட்களில் இதை வலியுறுத்தும்போது நாம் அதை எற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.

பெரும்பாலும் நல்லூர்க்கந்தனை தரிசிக்க குடும்பமாக,சுற்றத்தாருடன்,அயலவருடன் என்று எல்லோரும்  வழிபடப் போவது வழக் கம். அதிலும் தேர்த் திருவிழா என்றால் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார் கள். தன்னை நாடிவரும் பக்தர்களில் யார் அர சியல்வாதி  யார் சாதாரண குடி மகன்  என்ற பேதம் கந்தனுக்குக் கிடையாது. யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற பிரபலங்கள் எல்லாமே மேலாடை யைக் கழற்றி விட்டு, அர்ச்சனைத் தட்டுகளோடு நல்லூரானை வழிபடாமல்  போனது கிடை யாது. ஏனெனில் யாழ்ப்பாணத் தின் அடை யாளமாக மாறிப்போய் விட்டது நல்லூர்.
வடக்குமாகாணத்துக்கு முதன்முறையாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர் தல் பிரசாரப் பணிகளை  வேட்பாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.   இந்த வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்   வேட்பாளர்களும் தமது  ஆதர வாளர்கள் சகிதம்   பிரசாரக் களத்தில் குதித் துள்ளனர். தேர்தல் பற்றியோ பிரசாரம் பற் றியோ நல்லூர்க் கந்தனுக்கு எதுவும்  தெரி யாது. அவர் ஒரு அப்பாவி. 
சம்பந்தரும் கூட்டமைப்புச் சார்பாக தேர் தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாள ரான விக்கி ஐயாவும் நல்லூர் தேர்த்திரு விழாவுக்கு  கும்பிடப் போயிருந்தவை. இதை மீடியாகாரர் போட்டோ, வீடியோ எடுத்தது பரவலா செய்தியும் வந்திருந்தது..
 நிறை மீடியாக்களின்ர திருவிழாக்கால சிறப்பு அலுவலகங்கள் ஏராளமாக நல்லூர் ஆலயச் சூழலில் இருந்தது. அப்பிடித்தான் யாழ்ப்பாணத்து ரீவி ஒன்றும்  தனது ஒளிபரப்புக் காரியாலயத்தை வைச்சு போற, வாற பக்தர் களை இழுத்துப் பிடித்து தேர்த் திருவிழா பற்றி கருத்துக் கேட்டுக்கொண்டு இருந்திச்சினம். அப் பிடி கருத்து கேக்கேக்க "மைக்கை' சம்பந்தர் ஐயாட்டையும் நீட்டியிருக்கினம். அவரும் ஏதோ கருத்துச் சொல்லியிருக்கிறார்.

இது இணக்கப்படுத்தல்காரரின்ர காதிலையும்  கேட்டிட்டுதுபோல. வேட்டியைக் கட்டிக் கொண்டு கோயில் வாசல்ல அமைச்சருக்குப் பின் னால நிண்டு  அடியார்களுக்கு  ஏதோ அள்ளி  வழங்கிக்கொண்டிருந்த ஒருத்தர், அரை வாசியோட முருகனோட கோவிச்சுக் கொண்டு வீட்டை வந்திட்டார். வந்தவர் சும்மா நிற் கேல்லை. சூட்டோடுசூடா பத்திரிகை களுக்கு ""கோயிலுக்கு வந்து கூட்டமைப்பு பரப் புரை செய்யினம். பாத்துக்கொண்டு பேசாம இருக் கிறார் முருகன்'' எண்டு கண்டன  அறிக்கை எழுதி அனுப்பியும் போட்டார்.
கோயிலுக்கு போறது சாமி கும்பிடத் தான். ஆனால் இப்ப எல்லாம் அப்பிடி இல்ல. ஆற்ற  கழுத்தில பெரிசா ஏதும் தொங்குது, பிடுங்கினா எவ்வளவு தேறும் எண்டு ஒரு கூட்டம். யார் வாயில இருந்து என்ன கதை வருகுது எண்டு கேட்டு வீட்டுக்கு வந்து போட்டு குடுக்க இன்னொரு கூட்டம்.  இன்னும் கன நோக்கத்துக்காகத் தானே கன பேர் கோயிலுக்குப் போகினம். பக்திப் பர வசத்தோட கும்பிடப்போனா அடுத்த வன் என்னசெய்தா எங்களுக்கென்ன? நான் வந் தது கோயிலுக்கு சாமிகும்பிட. அதை கச்சிதமா முடிச்சிட்டு வீட்டுக்குப் போவம் எண்டு பெருந்தன்மையோட திரும்பியிருக்கவேணும்.
இணக்ககாரரும் அங்க என்ன கும்பிடவோ போனவை. அவை அங்க என்ன செய்தவை எண்டதை பல்லாயிரம் பக்தர்களும் கண்டவை. ஆனால் கோயில் கும்பிடப்போன சம்பந்தரும் விக்கினேஸ்வரனும்தான் மேடை போட்டு பரப்புரை செய்தவை எண்டு தங்கட கூத்துக் களை மறைக்க அறிக்கை வெளியிடுகினம்.
இப்பிடியே போனால் கொஞ்ச நாளில தேர் தல் காலத்தில் முருகனுக்கு தேரும் இழுக்கக் கூடாது, இன்னார் இன்ன இன்ன இடத்துக்கு மட்டுமே போகமுடியும் எண்டு லிஸ்ற் தருவினம். கவனம்!
பாவம்  முருகனுக்கு இது ஒண்டும் தெரி யாது.

நன்றி சுடர்ஒளி 11.-17.09.2013

வருகிறாள் தேர்தல் தேவி


--
யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ் மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு d ஓர்
உறவுப் பாலம் நீ d சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்.....

--


சந்தேக வருகை

    வடக்கு மக்களின் வாழ்வியலோடு ஒரு காலத்தில் ஒன்றிப் போயி ருந்தவள் யாழ்தேவி. கொழும்பில் பணிபுரிந்த யாழ்ப்பாணத்தவர் களுக்கான புஷ்பகவிமானம் யாழ்தேவிதான். வெள்ளிக்கிழமைகளில் பணிமுடிந்த கையோடு யாழ்தேவியில் ஏறினால் அடுத்தநாள் விடிகாலையில் வீட்டில் நிற்கலாம். ஆனால் இடைப்பட்ட போர்க்காலத்தில் அவள் எங்களிடமிருந்து தூரப்போயிருந்தாள். வவுனியாவோடு அவளின் வருகை மட்டுப்படுத் தப்பட்டிருந்தது. இப்போது கிளிநொச்சி வரை யாழ்தேவி அவசர வெள் ளோட்டமாக வந்து போயி ருக்கிறாள். சாதாரண நாள் களில் இந்த  பரீட்சார்த்த வருகை நிகழ்ந் திருந்தால் அது கொண்டாட் டத்துக் குரியதாக இருந்தி ருக்கும். ஆனால் தேர்தல் காலத்தில் நிகழ்ந்த இந்தத் தற்காலிக வருகை ஒரு சந் தேகத்தையே எல்லோருக் கும் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே தொடர்ச்சி யான போக்குவரத்துக்காகத் தான் அவளின் இந்த வருகை நிகழ்ந்ததா? அல்லது வடக் கில் இயல்பு வாழ்வு திரும்பி விட்டது என்று நம்பவைத்து வாக்குகளை கவரத் தான் இந்த வருகையா? என்ற கேள்விகளுக்கு இனி விடி யப் போகும் பொழுதுகளே பதில் சொல்லவேண்டும்.
------
இயற்கை உணர்வுடன் கூடிய இந்தப் பாடல் எல்லோரையும் கவர்ந்தது. பாடல் கவர்ந்த அளவுக்கு யாழ்தேவி யாரையும் கவரவில்லை என்பதுதான் வரலாறு.
வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,அந்த நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமளியோடு அடுத்த மாதம் யாழ்தேவி ரயில் கிளிநொச்சிவரை தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
அபிவிருத்தியின் பிரதான ஊடகமாக இருப்பது வீதி வலையமைப்பே. இதனூடான போக்குவரத்து சேவைகள் அபிவிருத்திக்கான ஏதுக்களை ஊக்குவிக்கின்றன. ஆனால், வடக்கின் விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை போக்குவரத்துக் காரணிகள் தடைசெய்ய,வடமாகாணத்தின் உற்பத்தித் திறன் மங்கிப்போனது.
வடபகுதிக்கான ரயில் சேவை முதன்முதலில் 1902 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது பயணிகள் சேவை அல்ல.இதனூடாகத் தபால் பொதிகளும் வர்த்தகப் பொருட்களுமே பரிமாறப்பட்டன. மிகவும் மந்தமான வேகம் கொண்டதாக இந்த ரயில்சேவை இருந்தது.
இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்டது. வடக்குக்கும் தெற்குக்குமான உறவுப்பாலமாக இந்தச் சேவை அமைந்தது. 411கீ.மீ. தூரம்கொண்ட கொழும்பு கோட்டைக்கும் dகாங்கேசன்துறைக்குமான யாழ்தேவி ரயில் பயணத்தின் அனுபவங்களை இப்போதிருக்கும் இளம் தலைமுறை அனுபவிக்கவில்லை.
வயதானவர்கள் மட்டுமே அந்தச் சுவார்சியமான கதைகளைச் சொல்வர்.
மூன்றுபத்தாண்டுகளாக இந்தத் தொடர்பு பேணப்பட, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி  முறிகண்டியில் வைத்து தாக்கப்பட்டது. உயிர் இழப்புடன் கூடிய இந்தத் தாக்குதல் காரணமாகத் தெற்கிற்கான ரயில் தொடர்பும் அறுந்து போனது. இந்தத் தொடர்பின் அறுப்பு ஒரு பிரயாணத்தின் துண்டிப்பு மட்டுமல்லாது,இரண்டு சமூகத்தினருக்குமிடையிலாக அறுப்பானது எனலாம்.
இன்று ""தேவி திரும்பி வருகிறாள்'' என்ற செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தும்போது, உணர்வார்ந்த பேச்சுக்களும், கதைகளும் இப்போதுள்ள, அந்தக் காலத்து  தேவியை அனுபவித்தவர்களிடம் மிளிர்வதைக் காணமுடிகிறது.
கலகலப்பு, ஆரவாரம், புதிய இடத்தைப் பார்க்கும் துடிப்பு, நட்புக்களின் சந்திப்பு என்று இந்தப் புதினங்கள் சொல்லி முற்றுறாதவை.
இன்று வடக்கில் தேர்தல் ஆரவாரத்தோடுதான் தேவி வரும் அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கிளிநொச்சிவரை பரீட்சார்த்தப் பயணத்தை யும் தேவி மேற்கொண்டு வெற்றிபெற்றுள்ளாள்.
90ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேவியின் பயணம் போருக்குப் பின்னர் வவுனியா, ஓமந்தை என விரிவாக் கப்பட்டு அடுத்தமாதம் கிளிநொச்சி வரைக்கும் தொடரவுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன் துறைவரை நடத்துவதற்கு, புனர்நிர்மாணப் பணிகள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஆரம்பிக்கப்பட்டது.
பழைமைகளை வெளிக்கொண்டுவர இருக்கும் தேவியின் பயணம் தேர்தல் அறிவிப்பாக இருக்கக்கூடாது. அபிவிருத்தியின் வெளிக்கூறுகள் மட்டும் மக்களின் இயல்புவாழ்வுக்கு உதவிடப்போவதில்லை.பதிலாக உட்கூறுகளில் நிறைவு காணப்படவேண்டும். இன்றும் அடிப்படைவசதிகள் இன்றி வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு தேவிவருவது தேவை யற்றவிடயம்.
அடிக்கட்டுமக்களின் தேவைகளும் அபிவிருத்தி உள்ளடக்கமாக மாறவேண்டும். வடக்கு தெற்கை வேகமாக இணைக்க அதிவேக சாலையும் தயார். ஆனால்....அகதிகள் குடிசைகள் வரப்போகும் மழையில் அடித்துச் செல்லாதிருக்கவும் ஒரு ஆயத்தம் தேவை என்பதை அபிவிருத்தியாளர்கள் கவனிக்கவேண்டும்.

நன்றி சுடர்ஒளி (14-20.08.2013)